நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டி ஜெய்ப்பூரில் நேற்று (நவம்பர் 17) இரவு நடைபெற்றது டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய மார்ட்டின் கப்தில் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை நியூசிலாந்தின் டேரில் மிட்செல் வீசினார். அந்த ஓவரில் முதல் 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து இந்தியா அணி வெற்றி பெற்றது
இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 62 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 36 பந்துகளில் 48 ரன்களும் எடுத்தனர்
இந்த வெற்றியால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டி20 போட்டி நாளை (நவம்பர் 19) இரவு ராஞ்சியில் நடைபெறுகிறது.
**-ராஜ்**
.�,