இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சரிவில் இருந்து மீளும் உத்வேகத்தில் உள்ள இந்திய அணி இன்று (மார்ச் 18) நான்காவது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் மூன்றாவது ஆட்டத்தில் இங்கிலாந்தும், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து மோதும் நான்காவது டி20 போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது. இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைத்துக் கொண்டது. அந்த உற்சாகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் தாக்குதல் தொடுப்பார்கள்.
இந்த தொடரில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கிறது. மூன்று ஆட்டங்களிலும் ‘டாஸ்’ ஜெயித்து இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றி கண்டிருக்கிறது. ஆனால் ‘டாஸ்’ என்ற மாயையை உடைத்தெறிந்து வெற்றி பெறும் வகையில் செயல்பட வேண்டும். அப்போதுதான் ஆண்டின் கடைசியில் நடக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்குச் சிறந்த முறையில் தயாராக முடியும் என்று இந்திய கேப்டன் கோலி ஏற்கனவே கூறியிருக்கிறார்.
இந்த ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியது வரும் என்பதால் இந்திய வீரர்கள் முழுவீச்சில் போராடுவார்கள். அதுவே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
**-ராஜ்**
�,