}உலகக்கோப்பை டி20 ஒத்திவைப்பு: எழும் கண்டனங்கள்!

Published On:

| By Balaji

ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பை 2020 ஒத்திவைக்கப்பட உள்ளதாகவும் முறையான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதே சமயம், இந்தியா இதனை ஐபிஎல் நடத்த வாய்ப்பாக பயன்படுத்தும்பட்சத்தில் அதனை எதிர்க்க வேண்டும் என கண்டனம் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட உள்ளதென்றும், இது அசல் அட்டவணைப்படி அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறாது என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸின் தீவிரத்தால் ஆஸ்திரேலியாவின் எல்லைகள் செப்டம்பர் இறுதி வரை சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தனிமைப்படுத்தல் மற்றும் சர்வதேச பயணம் குறித்து அரசாங்கத்தின் கடுமையான வழிகாட்டுதல்கள் உள்ளதால் உலகக்கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா ரத்து செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து 16 அணிகளை சரியான விருந்தோம்பலுடன் நடத்துவது குறித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கோரிக்கை, போதுமான பாதுகாப்பு வழிகளை பின்பற்ற முடியாது என ஆஸி., அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இதனை ஐபிஎல் நடத்த வாய்ப்பாக பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ளும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆலன் பார்டர் கூறும்போது, உள்நாட்டு டி20 தொடருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? உலகக்கோப்பை டி20 நடக்கவில்லை என்றால் ஐபிஎல் கிரிக்கெட்டும் நடக்கக் கூடாது. நிச்சயம் அப்படி நடந்தால் நான் கேள்வி எழுப்புவேன். இது நிச்சயம் பணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும். உலக டி20க்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்படி ஐபிஎல் தொடர் நடந்தால் நிச்சயம் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை அனுப்பக் கூடாது. இதனை நாம் ஒரு எதிர்ப்பாகச் செய்ய வேண்டும்” என குரல் எழுப்பியுள்ளார்.

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel