சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!

Published On:

| By Balaji

சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 244 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தற்போது வலுவான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா விளையாடிக்கொண்டிருக்கிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித் விளாசிய சதத்தின் உதவியுடன் 338 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் அஜிங்யா ரஹானே (5 ரன்), புஜாரா (9 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் மூன்றாவது நாளான நேற்று (ஜனவரி 9) இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் ஷாட்பிட்ச் பந்து தாக்குதலை தொடுத்து நெருக்கடி கொடுத்தனர். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஆடுகளத்தில் சுழலின் தாக்கம் இல்லை.

ரஹானே 22 ரன்னில் (70 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கம்மின்ஸ் வீசிய ஷாட்பிட்ச் பந்துக்கு பலியானார். சற்று எழும்பி வந்த பந்தை ரஹானே தடுத்து ஆட முற்பட்டபோது பேட்டின் முனையில் உரசிக்கொண்டு ஸ்டம்பை பதம்பார்த்தது. அடுத்து வந்த ஹனுமா விஹாரி (4 ரன், 38 பந்து) ரன் அவுட் ஆனார்.

இதன் பின்னர் புஜாராவுடன், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கூட்டணி போட்டார். பண்ட் கொஞ்சம் வேகமாக ரன் திரட்டினார். மறுமுனையில் ரொம்பவே பொறுமையைக் கடைப்பிடித்த புஜாரா 174 பந்துகளில் தான் அரைசதத்தை கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது மெதுவான அரைசதம் இதுதான். அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்ட இந்த ஜோடி பிரிந்ததும் நிலைமை தலைகீழானது. ஸ்கோர் 195 ரன்களை எட்டிய போது ரிஷாப் பண்ட் (36 ரன், 67 பந்து, 4 பவுண்டரி) ஹேசில்வுட்டின் பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்ற வார்னரிடம் பிடிபட்டார். அடுத்த ஓவரில் புஜாரா (50 ரன், 176 பந்து, 5 பவுண்டரி) கம்மின்சின் பந்து வீச்சில் வீழ்ந்தார். ‘பிட்ச்’ ஆகி சற்று எகிறிய பந்து அவரது கையுறையில் பட்டு விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. இதன் பிறகு இந்திய அணி முற்றிலும் நிலைகுலைந்தது. கடைசி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா (28 ரன், 37 பந்து, 5 பவுண்டரி) தவிர வேறு யாரும் தாக்குப்பிடிக்கவில்லை.

முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 100.4 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கடைசி 49 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்திய அணி தாரைவார்த்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் சாய்த்தனர். ஆஸ்திரேலிய பவுலர்கள் மொத்தம் 37 ஓவர்களை மெய்டனாக வீசி இந்தியாவின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினர்.

பின்னர் 94 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வில் புகோவ்ஸ்கி (10 ரன்), டேவிட் வார்னர் (13 ரன்) இருவரும் சொற்ப ரன்னில் வெளியேற்றப்பட்டனர். வார்னர், அஸ்வினின் சுழற்பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்தும் பலன் கிட்டவில்லை. டெஸ்டில் அஸ்வின் வீசிய வலையில் வார்னர் சிக்குவது இது 10ஆவது நிகழ்வாகும். அஸ்வினின் பந்து வீச்சில் அதிகமுறை அவுட் ஆன வீரர் வார்னர் தான்.

நான்காவது நாளான இன்று, தற்போது ஆஸ்திரேலியாவின் கை முழுமையாக ஓங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இன்றைய நான்காவது நாளின் உணவு இடைவேளையின்போது நான்கு விக்கெட் இழப்புக்கு இந்தியாவைவிட 276 ரன்கள் அதிகமாக எடுத்துள்ளனர். இதனால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share