^சுஷாந்த் சிங்கின் சிறந்த 5 படங்கள்!

Published On:

| By Balaji

துடிப்பான இளம் நடிகராக அறியப்பட்ட சுஷாந்த் சிங் ராஜ்புட் இப்போது நம்மிடம் இல்லை. மிகக்குறுகிய காலத்தில் ஏற்றமும் சரிவும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்த இந்த பாலிவுட் நட்சத்திரம், சில மறக்கமுடியாத பாத்திரங்களின் வழியாக எப்போதும் நம்மிடம் இருந்து கொண்டிருப்பார். இதுவே கலையின் மகத்துவம்.

சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியான படங்களில் சிறந்த 5 படங்களை இங்கே தொகுத்துள்ளோம்.

**1. டிடெக்டிவ் பியோம்கேஷ் பக்ஷி**

இது ஒரு பீரியட் டிராமா. டிடெக்டிவ் பியோம்கேஷ் பக்ஷி என்ற கற்பனையான கதாபாத்திரத்தில் நடித்த சுஷாந்த், தனது 3 வது படத்திலேயே ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிரூபித்த படமிது. 1940களில் அமைக்கப்பட்ட இந்தக் கதைக்களத்தை திபாகர் பானர்ஜி இயக்கியுள்ளார். இவர் சமகால இந்திய சினிமாவின் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக வலம் வருபவர். பாக்ஸ் ஆபீசில் இப்படம் தோல்வியை தழுவினாலும் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது டிடெக்டிவ் பியோம்கேஷ் பக்ஷி.

**2. கை போ சே

சுஷாந்த் சிங் ராஜ்புத் 2013ஆம் ஆண்டு சினிமாவில் கால் பதித்த முதல் படம். தன்னை நிருப்பித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு இளம் நடிகரின் பாய்ச்சலை சுஷாந்தின் நடிப்பின் மூலம் இந்தப் படத்தில் நாம் உணரலாம். தோல்வியுற்ற இளம் கிரிக்கெட் வீரரான இஷானாக நடித்த சுஷாந்த் சிங், தன்னைப் போலவே திறமையுள்ள ஒரு சிறுவனுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் விளையாட்டோடு, தனது காதலை உயிர்ப்போடு வைத்திருப்பவராக நடித்திருப்பார். அபிஷேக் கபூர் இயக்கிய இப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி, சுஷாந்தை திரையுலகத்திற்கு வரவேற்றது.

**3. எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி**

இந்தியாவிற்கு உலகக் கோப்பை பெற்றுக்கொடுத்த கேப்டனான எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்றுப்படமான இதில் சுஷாந்த் நடித்தார். தோனி போல நடப்பது, பேசுவது, பேட்டிங் செய்வது என தன்னுடைய கதாபாத்திரத்திற்காக இவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் எல்லோரையும் வியக்க வைத்தது. ஒரு கற்பனை கதாபாத்திரமென்றாலே நடிகராக அவ்வளவு மெனக்கெடும் சுஷாந்த், உலகெங்கும் அறியப்பட்ட ஒரு சாதனை வீரனின் கதையில் அவரை அப்படியே கண் முன் கொண்டு வருவதென்றால் எவ்வளவு மெனக்கெடலில் இருந்திருப்பார். திரையில் தோனியாக வந்த சுஷாந்தை முதல் காட்சியில் இருந்தே ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு அவரை ரசித்தது இவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இந்த படம் ஒரு சூப்பர்ஹிட்டாக மாறி சுஷாந்த் எனும் நடிகனை கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

**4. சிச்சோர்**

அடுத்த இடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் காலேஜ் டிராமாவான சிச்சோர். 2019 வெளியான இந்தத்திரைப்படம் இதுவரை சுஷாந்தின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக பாக்ஸ் ஆபீசில் வலம் வருகிறது.ஹாஸ்டல் சேட்டைகள், கல்லூரி காதல், நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதாக உறுதியளிப்பது, விளையாட்டு போட்டி,சோகம் என கல்லூரி வாழ்க்கையையும் அதன் பின்னான சமூக வாழ்க்கையையும் காட்டிய இப்படம் முழுமையான பொழுதுபோக்கு அம்சத்தோடு வந்தது. ஷ்ரத்தா கபூருடன் இணைந்த நடித்த இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்த படம் தியேட்டர்களிலும் OTT தளங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

**5. சோஞ்ச்ரியா**

சென்றாண்டு வெளியானது இந்த அதிரடி ஆக்ஷன் டிராமாவான சோஞ்ச்ரியா. மனோஜ் பாஜ்பாய், ரன்வீர் ஷோரே, அசுதோஷ் ராணா போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இருந்தபோதிலும், சம்பல் பள்ளத்தாக்கின் கொள்ளைகாரன் லகன் சிங் கதாபாத்திரத்தை சுஷாந்த் ஏற்று பாராட்டை பெற்றார். இது விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தாலும், படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களுமே உண்மையிலேயே அங்கே வாழ்ந்தவர்களை நினைவூட்டுகிறது என பாலிவுட்டின் முன்னணி விமர்சகர்கள் இப்படத்தை பாராட்டினர்.

கேதார்நாத், ராப்தா, சுத் தேசி ரொமான்ஸ் போன்ற பட்டியலில் இடம் பெற முடியாத சில நல்ல படங்களும் உள்ளன. கதாபாத்திரத்தின் எனர்ஜியை இயல்பாக தன் கண்களில் கொண்டு வரும் சுஷாந்தின் நினைவு நிச்சயம் நம் மனதை விட்டு நீங்காதது.

**-முகேஷ் சுப்ரமணியம்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share