‘சாதிய தூக்கிப் போடு’: கற்பிக்கும் சூரரைப் போற்று!

Published On:

| By Balaji

சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் சூரரைப் போற்று திரைப்படம் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் சில பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்திலிருந்து ‘மண்ணுருண்ட’ பாடல் நேற்று (மார்ச் 9) வெளியாகியுள்ளது.

மரண ஊர்வலத்தின்போது பாடப்படும் குத்துப்பாடலாக அமைந்துள்ள ‘மண்ணுருண்ட’ பாடலை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் பாடியுள்ளார்.

*ஏழை பணக்காரன் இங்கு எல்லாம் ஒண்ணு பங்கு*

*கீழ் சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா*

*மேல்சாதிக்காரனுக்கு கொம்பு இருந்தா காட்டுங்கையா*

*உழைக்கிற கூட்டமெல்லாம் கீழ் சாதி மனுஷங்களாம்*

*உக்காந்து திங்கிறவன் எல்லாம் மேல் சாதி வம்சங்களாம்*

*என்னங்கடா நாடு… அட சாதிய தூக்கிப் போடு*

என அமைந்த வலிமையான பாடல் வரிகளை ஏகாதசி எழுதியுள்ளார். சமத்துவம் பேசும் பாடலும் அதன் வரிகளும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. அதே நேரத்தில் கடுமையான விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share