சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவுக்கு சூரரைப் போற்று பெரிய வெற்றிப் படமாக அமைந்துவிட்டது. அதுவும், திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் மட்டும் வெளியாகியே பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து சூர்யாவின் அடுத்தப் படத்தை வெற்றிமாறன் இயக்க இருந்தார். வெற்றிமாறன் இயக்க தாணு தயாரிப்பில் ‘வாடிவாசல்’ துவங்க வேண்டியது. கொரோனா வந்ததால் தள்ளிப்போனது. அதோடு, படப்பிடிப்பில் குறைந்தது 1000 பேருக்கு மேல் பங்குபெற வேண்டிய சூழல் இருப்பதால் படம் துவங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க தயாராகிவருகிறார் சூர்யா. சன்பிக்சர்ஸ் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பிப்ரவரியில் துவங்குகிறது. படத்திற்கான முதல்கட்டப் பணிகளில் இருக்கிறார் பாண்டிராஜ். சூர்யாவின் 40வது படமாக உருவாகிறது. ஒரே ஷெட்யூலில் முழு படத்தையும் முடித்துவிட திட்டமாம். அதனால், தற்பொழுது கால்ஷீட் கொடுக்கத் தயாராக இருக்கும் நடிகர்களாகப் பார்த்து தேர்வு செய்துகொண்டு வருகிறது படக்குழு.
சூர்யாவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு, புதிய முகமாக தேர்ந்தெடுக்கலாம் என படக்குழு முடிவெடுத்திருக்கிறது. அப்படி, சூர்யாவுக்கு நாயகியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல். யார் ப்ரியங்கா? சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் டாக்டர் படத்தில் நாயகியாக சினிமாவில் அறிமுகமாகிறார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் சூர்யா படத்துக்கு கமிட்டாகியிருக்கிறார். டாக்டர் படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் வெளியான ‘செல்லம்மா’ பாடல் செம ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. அந்த மெழுகு டால் தான் இந்த ப்ரியங்கா அருள்மோகன்.
ஃபேமிலி டிராமாவாக உருவாகும் இப்படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் சக நடிக-நடிகையர்கள் குறித்த அறிவிப்பு படபூஜை அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தை முடித்துவிட்டு, ரஜினியின் ‘அண்ணாத்த’ இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதினி**
�,”