மயிலாடுதுறை பியர்லெஸ் தியேட்டரில் நவம்பர் 14ஆம் தேதி நடிகர் சூர்யாவின் வேல் படம் திரையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக மாவட்டச் செயலாளர் சித்தமல்லி ஆ.பழனிசாமி தலைமையில் பாமகவினர் போராட்டம் செய்தனர். இதன் காரணமாக வேல் திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு பார்வையாளர்கள் தியேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
மயிலாடுதுறைக்கு சூர்யா வரும்போது அவரை தாக்கும் நபர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் மயிலாடுதுறை பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் சூர்யாவுக்கு ஆதரவாக இணையத்தில் பலர் ட்வீட் செய்தனர். சூர்யாவுக்கு ஆதரவாக இணையத்தில் #WeStandWithSuriya என்ற டேக் டிரெண்ட் ஆனது.
சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா ரசிகர்கள் பலர் ஒன்று கூடி ட்வீட் செய்து வருகிறார்கள். பாமகவுக்கு எதிராக பலர் இதில் ட்வீட் செய்துள்ளனர். இந்த நிலையில் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சூர்யா அண்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜெய் பீம்’ படம் அதிகாரத்துக்கு எதிரான மக்களின் போர்க்குரலாக உலகமெங்கும் ஒலிக்கிறது. படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் அங்கீகாரமும்தான் இந்த மண்ணில் மாற்றம் நிகழும் என்பதற்கான நம்பிக்கை. அதேநேரம் படத்துக்கு எதிரான கருத்துகளை ஒருசிலர் திட்டமிட்டுப் பரப்பி வருவதையும் நாம் கவனிக்கிறோம்.
சூர்யா அண்ணனுக்கு எதிராகப் பேசப்படும் நியாயமற்ற விஷயங்களை அறம்சார்ந்த இந்த சமூகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் எப்போதும்போல் நாம் பொறுமையாக இருப்பதுதான் சிறப்பு. சூர்யா அண்ணன் சாதி, மத, வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை நாம் மட்டும் அல்ல, இந்த நாடும் நன்கறியும். அதனால் எவருக்கும் விளக்கமோ பதிலடியோ கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. கட்டுப்பாடும் பொறுமையும் கொண்ட நம் மன்றத்தினர் பேச்சாகவோ சமூக வலைதளப் பதிவுகளாகவோ எவ்வித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற என்று சூர்யா நமக்கு கற்பித்த பாதையில் பயணிப்போம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
**-அம்பலவாணன்**
�,