பல வருடங்களுக்கு பிறகு நடிகர் சூர்யா- ஜோதிகா இருவரும் திரையில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.
நடிகர் சூர்யா ஜோதிகா இருவரும் கடந்த 2007ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம், குழந்தைகள் என ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஜோதிகா ’36 வயதினிலே’ திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
கதாநாயகியை மையப்படுத்திய, தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய கதைகளை நடிகை ஜோதிகா தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த வகையில் அவர் நடித்த ‘ராட்சசி’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘காற்றின் மொழி’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் ரசிகர்கள் ஜோதிகா சூர்யா இருவரும் இணைந்து திரையில் நடிக்க வேண்டும் என தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தனர். கடைசியாக இருவரும் சேர்ந்து நடித்த படம் ‘சில்லுன்னு ஒரு காதல்’.
இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர் எனும் தகவல் வெளியாகியுள்ளது. ‘நந்தா’, ‘பிதாமகன்’ திரைப்படங்களுக்கு பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து சூர்யா பாலாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தான் ஜோதிகா சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ இந்த மாதம் 10ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அடுத்து வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கிறார் சூர்யா. அதன் பிறகு பாலா திரைப்படம்.
பாலா படத்தில் ஜோதிகா இணைவது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது
**ஆதிரா**