குடும்பத்துடன் வெகேஷன் செல்லும் சூர்யா

Published On:

| By admin

நடிகர் சூர்யா குடும்பத்துடன் வெகேஷன் செல்ல உள்ளார்.

‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ தற்போது ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் எனும் சிறப்பு தோற்றம் என அடுத்தடுத்து தனது சினிமா பயணத்தில் நடிகர் சூர்யா வெற்றி படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் கைவசம் தற்போது பாலா திரைப்படம், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’, மீண்டும் ‘ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல் உடன் ஒரு படம், லோகேஷ் கனகராஜுடன் ‘விக்ரம் 3’ இந்தியில், ‘சூரரைப் போற்று’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் சிறப்புத் தோற்றம் என அடுத்தடுத்து பிஸியாக உள்ளார்.
இப்போது பாலா படத்தில் முழு கவனம் செலுத்தி வரும் வேளையில், ‘வாடிவாசல்’ படத்துக்காக காளைகள் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலா திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இரண்டாவதுகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதற்கிடையில் நடிகர் சூர்யா மற்றும் பாலா திரைப்படம் கைவிடப்பட்டது என வதந்திகள் கிளம்பியது. மேலும் பாலா மற்றும் நடிகர் சூர்யாவுக்கு இடையில் பிரச்சினை என்றும் செய்திகள் வந்தன.
ஆனால், இவையெல்லாம் வதந்திகள், பொய் என்று நிரூபிக்கும் வகையில் நடிகர் சூர்யா பாலாவுடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் அடுத்தடுத்து படங்கள் மற்றும் தயாரிப்பு பணிகள் காரணமாக இப்போது நடிகர் சூர்யாவின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் வரை குடும்பத்துடன் ஒரு மாதம் கோவாவுக்குச் செல்ல உள்ளார். இதன் பிறகே மற்ற பணிகள் ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது.
**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share