அமேசானில் சூரரைப் போற்று: சூர்யாவின் ரூ.5 கோடி நிதி!

Published On:

| By Balaji

அமேசானில் சூரரைப் போற்று திரைப்படம் வெளியிடப்படும் என சூர்யா தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வயது வித்தியாசத்தை குறிப்பிடும் விதமாக வெவ்வேறு தோற்றங்களில் சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்று அவ்வப்போது செய்திகள் வந்தன. 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜோதிகா நடித்திருந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட்டதால் திரையரங்கு உரிமையாளர்கள் கோபத்துக்கு ஆளாகியிருக்கும் சூர்யா, அவர் நடித்த படத்தையும் இணையத்தில் வெளியிடுவாரா? என்கிற சந்தேகம் எழுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் வெளியீடு குறித்து சூர்யா முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று (ஆகஸ்ட் 22) வெளியிட்டுள்ளார். அதில், “இயக்குனர் சுதா கொங்கராவின் பல ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள, சூரரை போற்று திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகச்சிறந்த படமாக நிச்சயம் இருக்கும். மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று நம்புகிற இத்திரைப்படத்தை, திரையரங்கில் அமர்ந்து என் பேரன்பிற்குரிய சினிமா ரசிகர்களுடன் கண்டு கழிக்கவே மனம் ஆவல் கொள்கிறது.

அனால், காலம் தற்போது அதை அனுமதிக்கவில்லை. பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும், கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படத்தை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் கடமை” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனது ‘2 டி எண்டர்டெயின்மெண்ட், நிறுவனம் இதுவரை எட்டு படங்களை தயாரித்து வெளியீடு செய்திருக்கிறது. மேலும் பத்து படங்கள் தயாரிப்பில் உள்ளன. என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில், நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சூர்யா,

‘சூரரை போற்று திரைப்படத்தை, அமேசான் ப்ரைம் வீடியோ’ மூலம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த இந்த முடிவை, திரையுலகை சார்ந்தவர்களும், என் திரைப்படங்களை திரையரங்கில் காண விரும்புகிற பொதுமக்களும், நற்பணி இயக்கத்தை சேர்ந்த தம்பி, தங்கைகள், உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Vinayagar Chathurthi wishes to all!#SooraraiPottruOnPrime @PrimeVideoIN pic.twitter.com/ZdYSF52ye2

— Suriya Sivakumar (@Suriya_offl) August 22, 2020

சூரரை போற்று திரைப்படம் வெளியிட்டு தொகையில் இருந்து தேவை உள்ளவர்களுக்கு ‘5 கோடி ரூபாய்’ பகிர்ந்தளிக்க முடிவு செய்திருப்பதாகவும், பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கொரோனா யுத்த காலத்தில்’ முன்நின்று பணியாற்றியவர்களுக்கும், இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும், உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

**எழில்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share