ஒரே நேரத்தில் இரண்டு படங்களை ஒரு தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதென்பது மிகப்பெரிய ரிஸ்க். ஆனால், சன்பிக்சர்ஸ் ஒரே நேரத்தில் நான்கு பெரிய ஹீரோக்களின் படத்தை, அதுவும் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
லைகா நிறுவனம் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து படங்களை தயாரிக்கத் துவங்கி சமீபகாலமாக கொஞ்சம் திணறி வருகிறது என்பதே உண்மை. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமென்றாலும் சிக்கல் வருவது இயல்புதான்.
பெரிய பட்ஜெட்டில் துவங்கும் படங்கள் திடீரென பாதியில் நின்றால், அதற்குப் போட்ட முதலீடு முடங்கிவிடுகிறது. அதனால், நிச்சயம் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பின்னடைவு தான். உதாரணமாக லைகா தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2-வைக் கூறலாம். அதுபோல, ஒரு படம் முழுமையாக முடிந்துவிட்ட நிலையிலும், ரிலீஸாகாமல் தள்ளிப் போனாலும் படத்தின் பட்ஜெட் அதிகமாகும். அதுவும் தயாரிப்புத் தரப்பின் பாக்கெட்டை இறுக்கும். உதாரணமாக, லைகா தயாரிப்பில் த்ரிஷா நடிப்பில் நீண்ட நாளாக வெளியாகாமல் இருக்கும் ‘ராங்கி’ படத்தைக் கூறலாம்.
அப்படியான எந்த விடயமும் இல்லாமல் தமிழின் உச்ச நடிகர்களான ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படத்தை எந்த சிக்கலுமின்றி தயாரித்து வருகிறது சன்பிக்சர்ஸ் நிறுவனம்.
ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. டி.இமான் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இப்படம், வருகிற நவம்பர் 04ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பீஸ்ட்’. பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் கொரோனா லாக்டவுனுக்கு நடுவே ஜார்ஜியாவில் வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பியது. தற்பொழுது, சென்னையில் மூன்று இடங்களில் செட் அமைத்து படக்குழு படப்பிடிப்பை நடத்திவருகிறது. எப்படியும், அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிவிடும்.
இவ்விரு படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் 40வது படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன்பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கடைக்குட்டிச் சிங்கம், நம்ம வீட்டுப்பிள்ளை பட ஸ்டைலில் மீண்டுமொரு கமர்ஷியல் பேமிலி டிராமாவாக பாண்டிராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். காரைக்குடிப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இறுதியாக, தனுஷ் நடிக்க மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷின் 44ஆவது படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சன்பிக்சர்ஸூக்குச் சொந்தமான பெருங்குடி ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. செலவுகளை பெரிதளவில் குறைக்க, சொந்த ஸ்டுடியோவில் எடுக்க திட்டமாம்.
ஆக, நடிகர்களுடைய பாலிசிக்கு உட்பட்டு அதே நேரத்தில், படப்பிடிப்புக்குள் எந்த சிக்கலும் வராமல் படங்களைத் தயாரித்து வருகிறது சன்பிக்சர்ஸ். லைகா, சன்பிக்சர்ஸ் போலவே மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் நிறுவனம். ஆனால், இந்நிறுவனம் ஒரு படத்தை முடித்துவிட்டப் பிறகே அடுத்தப் படத்தைக் கையில் எடுக்கும்.
கூடுதலாக, பட ரிலீஸில் காட்டும் தாமதம், இயக்குநர்களுடன் சர்ச்சை என எந்த சிக்கலையும் உருவாக்காமல் இருப்பதே லைகாவிடமிருந்து சன்பிக்சர்ஸ் தனித்து தெரிவதற்குக் காரணம் எனலாம்.
**- தீரன்**
�,