சம்மர் ரிலீஸை உறுதி செய்திருக்கும் படங்களின் லிஸ்ட்!

entertainment

திரையுலகம் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அடுக்கடுக்காகப் புதுப் படங்களை ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் மீண்டும் துவங்கிவிட்டது. குறிப்பாக, இந்த கோடை காலமான மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான பெரிய ஹீரோஸ் படங்கள் அடுக்கடுக்காக வெளியாக இருக்கிறது. இந்தப் படங்கள் கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டியவை. மொத்தமாக இந்த சம்மரில் வெளியாகிறது. இதுவரை, சம்மர் ரிலீஸூக்கு உறுதியாகியிருக்கும் படங்களின் பட்டியல் இவைதான்.

**நெஞ்சம் மறப்பதில்லை**

மார்ச் மாதத்துக்கான முதல் ரிலீஸ் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் நீண்ட நாளாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருந்த படம். இறுதியாக, ரிலீஸை தொட்டுவிட்டது. படத்துக்கான பொருளாதார சிக்கல்களை சரிசெய்து படத்தை ரிலீஸூக்கு கொண்டுவந்துவிட்டது தயாரிப்பு தரப்பு. இப்படம், மார்ச் 05ஆம் தேதி வெளியாகிறது.

**டெடி**

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘டெடி’. ‘கஜினிகாந்த்’, ‘காப்பான்’ படங்களைத் தொடர்ந்து ஆர்யா – சாயிஷா ஜோடி இணைந்து நடித்திருக்கும் படம். நிஜ ஜோடியான இவர்கள் கல்யாணத்துக்குப் பிறகு, இணைந்து நடிக்க வெளியாகும் முதல் படம். டி.இமான் இசையில் சதிஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிக் டிக் டிக் படத்துக்குப் பிறகு, சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் இப்படம் வெளியாகிறது. இப்படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியான ஹாட்ஸ்டாரில் மார்ச் 12ஆம் தேதி வெளியாகிறது.

**ராஜவம்சம் **

இயக்குநர் சுந்தர்.சி-யிடம் உதவியாளராக இருந்து இயக்குநராக அறிமுகமாகும் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ராஜவம்சம்’. சசிகுமாருக்கு நாயகியாக நிக்கி கல்ராணி நடித்திருக்கிறார். விஜயகுமார், ராதாரவி, தம்பிராமையா, ரேகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கூட்டுக் குடும்பத்தை மையமாகக் கொண்டக் கதைக்களமாம். சாம் சிஎஸ் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் மார்ச் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது.

**டாக்டர் **

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் இரண்டாவது படம் இது. இந்தப் படத்திலிருந்து செல்லம்மா, நெஞ்சமே தொடர்ந்து நேற்று வெளியான ஓ பேபி பாடல் வரை அனைத்துமே இணையத்தில் செம ஹிட். அதோடு, அடுத்ததாக, விஜய் 65 படத்தை நெல்சன் இயக்க இருப்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். படத்துக்கு அனிருத் இசை. இப்படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

**சுல்தான் **

கார்த்தி நடிப்பில் 2019-ல் மூன்று படங்கள் வெளியானது. ‘தேவ்’, ‘கைதி’ & ஜோதிகாவுடன் ‘தம்பி’ . இதில் கைதி மிகப்பெரிய ஹிட். 2020-ல் கார்த்திக்கான டார்கெட்டாக இருந்த சுல்தான், இந்த வருடம் வெளியாவது உறுதியாகியிருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ பட இயக்குர் பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கார்த்திக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் உருவாகியிருக்கிறது. அதோடு, படம் ஏப்ரல் 02ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

**கர்ணன்**

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் கர்ணன். பரியேறும் பெருமாள் கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கர்ணன்’. தனுஷூடன் மலையாள நடிகர் லால் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் படத்திலிருந்து வெளியான ‘கண்டா’ பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படம் ஏப்ரல் 09 ஆம் தேதி வெளியாகிறது.

**தலைவி**

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமே ‘தலைவி’ இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி, கருணாநிதி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், எம்.ஜி.ஆர் ரோலில் அரவிந்த்சாமி , சோபன்பாபு ரோலில் ஜிஷ்ஷூ செங்குப்தா, சசிகலா கேரக்டரில் பூர்ணா, ஜானகி ராமச்சந்திரன் கேரக்டரில் மது, ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவாக பாக்யஸ்ரீ, ஆர்.எம்.வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராகிவருகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகிவரும் இப்படம் தேர்தலை கருத்தில் கொண்டு ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகிறது.

**எம்.ஜி.ஆர். மகன்**

சசிகுமார் நடிப்பில் எக்கச்சக்கப் படங்கள் தயாராகிவருகிறது. அதில், இரண்டாவது ரிலீஸ் எம்.ஜி.ஆர்.மகன் திரைப்படம். ரஜினி முருகன், வருத்தப் படாத வாலிபர் சங்கம் படங்களைக் கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் படமே ‘எம்.ஜி.ஆர்.மகன்’. இதில், சத்யராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ‘எம்.ஜி.ஆர் மகன்’ திரைப்படம் எப்ரல் 23-ஆம் தேதி வெளியாகிறது.

– ஆதினி�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *