நிவேதிதா லூயிஸ்
டாக்டர் தனகோடி ராஜு- தென்னிந்தியாவின் முதல் பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்கியவர். வில்லியம் எட்வர்டு தனகோடி ராஜு. இந்தப் பெயரை ஈராண்டுக்கு முன் சாந்தோம் மரபு நடைக்கான தயாரிப்புகள் செய்கையில் முதன்முதலில் கண்டேன்.
*சாந்தோம் காது கேளாதோர் வாய் பேசாதோருக்கான பள்ளி, முன்னாளில் தனகோடி ராஜுவின் பங்களா, இப்போதைய நிலை.*
சாந்தோமில் மேற்காணும் மாளிகை முக்கிய சாலையில் பாழடைந்து கிடப்பதை அதைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரும் அறிந்திருக்கக்கூடும். இந்த மாட மாளிகையைக் கட்டி அதில் வாழ்ந்த பெரும் செல்வந்தரான டாக்டர் தனகோடி ராஜு குறித்து நமக்கு என்ன தெரியும்?
மரபு நடைக்குப் பின், ஈராண்டு கழித்து ஆய்வுக்காக ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் எழுதிய சில கடிதங்களை வாசிக்க நேர்ந்தது. அதில் தலைகாட்டினார் தனகோடி ராஜு! தனகோடி ராஜு எழுதிய ‘Essentials of Hygiene’ என்ற நூலைப் பற்றிக் கடிதம் ஒன்றில் குறிப்பிடும் ‘கைவிளக்கேந்திய காரிகை’ என்று செவிலியர் சங்கமும், செஞ்சிலுவை சங்கமும், மருத்துவ உலகும் கொண்டாடும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், அந்த சுகாதாரக் கையேட்டைப் பாராட்டுகிறார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் இந்த நூலை எழுதியிருக்கும் மதராஸைச் சேர்ந்த மருத்துவர் தனகோடி, பெண்களுக்கான எளிய மருத்துவ தற்சுகாதாரக் கையேட்டை எழுத சரியான நபர் என்று சிபாரிசு செய்கிறார் நைட்டிங்கேல். உலகின் தலைசிறந்த செவிலியரென்று அறியப்பட்ட ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் சிபாரிசு செய்த மருத்துவர், நூல் என்றால், தனகோடி ராஜு மிகப்பெரிய ஆளுமையாக இருந்திருக்கிறார் என்பது அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் என் ஆர்வத்தை மேலும் தூண்டியது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன. கிறிஸ்துவ இசை மும்மூர்த்திகளில் ஒருவரும் கிறிஸ்துவக் கம்பர் என்று பெயர் பெற்றவருமான ஹென்றி ஆல்பிரடு கிருஷ்ணப்பிள்ளை, தீவிர சைவராக இருந்து கிறிஸ்துவராக மதம் மாறியவர். கிருஷ்ணப்பிள்ளை மதம் மாற மிகமுக்கிய காரணி அவருடன் தனகோடி ராஜு கொண்டிருந்த நட்பு! 1852ஆம் ஆண்டு ராபர்ட் கால்டுவெல்லால் ஹக்ஸ்டேபிள் என்ற ஆங்கிலேயருக்கு தமிழ் பயிற்றுவிக்க ஆசிரியராக நியமிக்கப்பட்டார் கிருஷ்ணப்பிள்ளை. ஹக்ஸ்டேபிளால் கிறிஸ்துவம் குறித்த அறிமுகம் கிருஷ்ணப்பிள்ளைக்குக் கிடைத்தது. சென்னை சாந்தோமுக்கு வேலை நிமித்தம் பணிமாற்றி வந்த கிருஷ்ணப்பிள்ளைக்கு அப்போது சாந்தோமிலிருந்த தனகோடி ராஜுவின் நட்பு கிடைத்தது.
*
டாக்டர் தனகோடி ராஜு
*
‘இளமை பக்தி’, ‘ஆத்தும விசாரம் தீர்த்தல்’, ‘இருதயக் காவல்’, ‘மோட்சப்பிரயாணம்’ போன்ற நூல்களை கிருஷ்ணப்பிள்ளை வாசிக்கத் தந்தார் தனகோடி. இதில் மோட்சப் பிரயாணம் என்ற நூல் ஜான் பன்யனின் ‘Pilgrim’s Progress’ நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்த நூலே கிருஷ்ணப்பிள்ளையின் மனதை மாற்றி அவரை திருமுழுக்கு பெறவைத்தது என்று தமிழ் அறிஞரான பி. எஸ். ஏசுதாசன் எழுதுகிறார். இதன் விளைவாக சாந்தோம் தூய தோமா தமிழ் ஆலயத்தில் ஏப்ரல் 1, 1858 அன்று திருமுழுக்கு பெற்று கிறிஸ்துவராக மாறினார் ஹென்றி ஆல்பிரடு கிருஷ்ணப்பிள்ளை. ‘மோட்சப் பிரயாணம்’ என்ற தனகோடி ராஜு கொடுத்த நூல் தான் பின்னாளில் ‘இரட்சணிய யாத்திரிகம்’ என்ற பெரும் காப்பியத்தை கிருஷ்ணப்பிள்ளை எழுத தூண்டுகோலாக அமைந்தது.
சென்னை நகரம் அன்றைய மாகாணத்தின் கிறிஸ்துவர்களுக்குப் பெரும் புகலிடமாக இருந்தது. கிருஷ்ணப்பிள்ளை, தனகோடி நட்பு சட்டென ஏற்பட அவர்கள் இருவருமே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஒரு காரணம். நெல்லை மாவட்டம் கரையிருப்பில் பிறந்து, பாளையங்கோட்டை, சாயர்புரம் என்று அம்மாவட்டத்தில் பணியாற்றி சென்னை வந்த கிருஷ்ணப்பிள்ளைக்கும், பாளையங்கோட்டையில் பிறந்து வளர்ந்த தனகோடிக்கும் நட்பு ஏற்பட ‘ஊர்ப்பாசம்’ மட்டும் காரணமாக இருந்திருக்கவில்லை.
கிருஷ்ணப்பிள்ளையின் சுயசரிதை எழுதிய கடம்பவன சுந்தரனார், “நெல்லை மாவட்டத்தில் மிஷனரிகளின் தாக்கத்தால் பெரிய குடும்பங்களைச் சேர்ந்த, தமிழ் நன்கு கற்றுணர்ந்த இளைஞர்கள், தங்கள் சொந்த மதத்தில் ஆன்மீகத் தேடலை முன்னெடுத்தார்கள். அங்குள்ள சடங்குகளும், விரதங்களும் அவர்களது மனம் தேடிய நிம்மதியைத் தரவில்லை, அவர்கள் இயல்பாகவே கிறிஸ்துவத்தைத் தேடிப் போனார்கள்”, என்கிறார். அப்படி கிறிஸ்துவத்தைத் தேடி கிருஷ்ணப்பிள்ளைக்கும் முன்பாக வந்தவர் தனகோடி ராஜு. இந்தப் பயணம் அவர்களுக்கு எவ்வளவு சிக்கலாக இருந்தது என்று விவரிக்கிறார் திவான் பகதூர் ஏ.எஸ்.அப்பாசாமி பிள்ளை.
அவர் எழுதிய ‘Fifty Years Pilgrimage of a Convert’ என்ற நூலின் முன்னுரையில், “இந்தச் சிறிய நூல் மதம் மாறிய ஒரு மனிதன் வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய சிக்கல்கள், சூழல், இவற்றைத் தாண்டி ஆன்மிகப் பாதையில் அவன் பயணம் எப்படி இருந்தது என்பதைச் சொல்கிறது…மிஷனரிகள் மத்தியில் ஒரு மனிதனின் பிரச்னைகள் பெரும்பாலும் அவன் மதம் மாறி திருமுழுக்கு பெற்றதும் நீங்கிவிடுகின்றன என்று தான் சொல்லப்படுகிறது.”
“ஆனால் அதன் பின்பு தான் சிக்கல்கள் தொடங்குகின்றன. ஒரு கிறிஸ்துவனாக வாழ்க்கையைக் கொண்டு செல்ல அவன் எவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது என்பதையும், அவன் அதை எப்படி எதிர்கொள்வது என்பதையும் பேசுகிறேன். 50-75 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்துவத்தைத் தழுவிய சிறு குழுவில் நானும் ஒருவன்; அவர்களில் பலர் இறந்துவிட்டார்கள், சிலர் மிகவும் உடல்நலம் குன்றியிருக்கிறார்கள். ஆகவே நான் என் சொந்த அனுபவங்களின் ஊடே அவர்களின் வாழ்க்கையையும் விவரிக்கிறேன்”, என்று எழுதுகிறார்.
*
திவான் பகதூர் ஏ.எஸ்.அப்பாசாமி பிள்ளை
*
அப்படி 1924ஆம் ஆண்டு அப்பாசாமி குறிப்பிடும் அவரது சில நண்பர்கள்- ஹென்றி ஆல்பிரடு கிருஷ்ணப்பிள்ளை (தன் குரு இவர் என்றும் சொல்கிறார்), தனகோடி ராஜு, இ. முத்தையா பிள்ளை, டி.ஏ.ஜோதிநாயகம் பிள்ளை, டபிள்யூ.டி.சத்தியநாதன், டபிள்யூ.ஈ. கணபதி பிள்ளை, ஜேசுதாசக் கவிராயர் போன்றவர்கள் பற்றி ஜஸ்டிஸ் எம்.டி.தேவதாஸ் பிள்ளை நூல் ஒன்றை எழுதியிருப்பதையும் தெரிவிக்கிறார். அந்த நூலில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிராமணர், வெள்ளாளர், மறவர், ரெட்டி, நாயக்கர், நாடார் என பல சாதியினரும் புராடஸ்டண்ட் கிறிஸ்துவர்களாக மாறினார்கள் என்று தேவதாஸ் எழுதியிருக்கிறார். பாளையங்கோட்டையில் குருயிக்ஷாங்க் என்ற பார்வையற்ற மிஷனரி நடத்திய பள்ளியில் பயின்ற 7 இளைஞர்களின் கதையை ரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறார் தேவதாஸ்.
இதில் பாளையங்கோட்டை பப்ளிக் பிராசிக்யூட்டரின் மருமகனான தனகோடி ராஜுவின் கதையும் உண்டு. 1839ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் தனகோடி ராஜு பிறந்தார். இந்த 7 இளைஞர்களில் மூத்தவர், 17 வயதில் முன்ஷி பட்டம் பெற்றவரான இ. முத்தையா பிள்ளை. முத்தையா பிள்ளை, எட்வர்டுப் பிள்ளை மற்றும் தனகோடி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிடுகிறார் தேவதாஸ். ராஜு பெரும் புத்திசாலியாகவும், தெளிவாகவும் இருப்பார் என்றும் சொல்கிறார்.
“மூன்று நண்பர்களும் சேர்ந்து கேள்விகள் எழுப்பி, தத்துவவியலாளரான வில்லியம் பாலி எழுதிய ‘A View of Evidences of Christianity’ என்ற நூல் குறித்து விவாதித்தார்கள். இந்து மதம், கிறிஸ்துவ மதத்துக்கு இடையேயான வேறுபாடுகளை ஆராய்ந்து இறுதியில் குடும்பத்தின் விருப்பத்துக்கு எதிராக, மதம் மாறத் துணிந்தார்கள். மதமாற்றம் காரணமாக தாங்கள் இழக்கப்போகும் பொருளாதார ஸ்திரத்தன்மை, சமூக அந்தஸ்து என்று எல்லாமும் விவாதித்திருந்தார்கள்.”
“மதம் மாறிய கிறிஸ்துவர்கள் எப்படி உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், குடிக்க வேண்டும் என்று மிஷனரிகள் வகுத்திருந்த சட்டதிட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்தார்கள். இவர்களின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட மிஷனரிகள் திருமுழுக்கு தர முன்வந்தார்கள். மதமாற்றத்தால் இவர்கள் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களைப் பற்றி நான் பேசப் போவதில்லை. வாழ்க்கையின் இறுதிவரை இணைபிரியாமல் நட்பாக வாழ்ந்த இவர்கள் சகோதரர்கள் போலவே வாழ்ந்து மடிந்தார்கள்”, என்று எழுதுகிறார் தேவதாஸ்.
மதம் மாறியபின் மதராஸுக்கு 1861ஆம் ஆண்டு தனகோடி ராஜு மருத்துவம் படிக்க வந்தார் என்று தன் நூலில் தேவதாஸ் எழுதுகிறார். “மருத்துவம் கற்க தன் மனைவியுடன் மதராஸ் வந்த தனகோடி, இங்கே கையில் பணமின்றி தவித்தார். மதம் மாறிய காரணத்தால் குடும்பம் அவரைத் தலைமுழுகிவிட்டது. மனைவியின் நகைகளை விற்று வாழ்க்கையை ஓட்டினார். அப்போது ‘ஜன விநோதினி’ என்ற அரசின் கல்வித் துறை இதழ் ஒன்று வெளிவந்துகொண்டிருந்தது. அதன் ஆசிரியராக முத்தையா பிள்ளை பணியாற்றிக்கொண்டிருந்தார். மாதம் நூறு ரூபாய் அவருக்கு ஊதியம் வழங்கப்பட்டது.”
“தனகோடியின் நிலையை அறிந்திருந்த முத்தையா, அவருக்கு உதவ நினைத்தார். தன் ஊதியத்தில் பாதியை தனகோடிக்கு அளித்த முத்தையா, ஜன விநோதினி இதழில் மருத்துவம், சுகாதாரம் குறித்த கட்டுரைகள் எழுதுமாறு தனகோடியை பணித்தார். துறை மேலிருந்த பெரும் ஆர்வம், இயல்பாகவே இருந்த புத்திசாலித்தனம் என இரண்டும் சேர, தனகோடி ராஜுவால் அருமையான கட்டுரைகளை இதழுக்கு எழுத முடிந்தது. மக்களும் அவரது கட்டுரைகளை வெகுவாகப் பாராட்டினார்கள். நண்பர்கள் இருவரும் இணைந்து அந்த இதழை பொது மக்களிடம் வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்தார்கள்.”
கணவர் படும் இன்னல்களைக் கண்ட தனகோடியின் மனைவியும் கிறிஸ்துவத்தைத் தழுவி தன் பெயரை அன்னா என்று மாற்றிக்கொண்டார். தன் நிலை உணர்ந்திருந்த தனகோடி, முழு கவனத்தை படிப்பின் மேல் திருப்பினார். 1867ஆம் ஆண்டு வெளிவந்த “Quarterly Journal of Medical Science” நூலில், மதராஸ் மருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளரான சிப்பர்ஃபீல்டு, “லேன் ஸ்காலரான தனகோடி ராஜு, தன் நடத்தை, ஆர்வம், கவனம், திறமை போன்றவற்றின் மூலம் ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். இன்னும் சில நாள்களில் எம்.பி. & சி.எம். (அன்றைய எம்.பி.பி.எஸ்.) படிப்புக்கான ‘ஃபர்ஸ்ட் எக்சாமினேஷனை’ எழுதவுள்ளார்”, என்று எழுதியிருக்கிறார்.
அதே 1866-1867ஆம் ஆண்டு மதராஸ் மருத்துவக் கல்லூரி ஆண்டு அறிக்கையில், நான்காவது செஷனின் ‘பிரிலிமினரி தேர்வுகளில்’ தனகோடி ராஜு வெற்றிகரமாகத் தேர்வாகியிருக்கிறார் என்ற தகவலிருக்கிறது. டிஸ்டிங்க்ஷன் வழங்கவும் தனகோடி ராஜுவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. 1860களின் இறுதியில் தனகோடி ராஜு தன் மருத்துவப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தனியார் மருத்துவராக தன் பணியை தனகோடி தொடங்கினார். தொழில் நேர்மை, கடும் உழைப்பு காரணமாக விரைவில் நகரின் முக்கிய மருத்துவர்களில் ஒருவரானார். தனகோடி- அன்னா தம்பதிக்கு, சாமுவேல், டேவிட், பிரபுவா என்ற மூன்று மகன்களும், மூன்று மகள்களும் பிறந்தார்கள். “எவ்வளவு பணம் பின்னால் வந்த போதும், தனகோடி தன் குழந்தைகளை மிக எளிமையாகவே வளர்த்தார். அவர்கள் வீட்டு உணவு எளிமையாகவே இருக்கும். ஆனால் கலைகளும், கைவினைக் கலைகளும் கற்றுத்தந்து அவர்களை நல்ல மக்களாக வளர்த்தார். நகரின் தலைசிறந்த மருத்துவரான போதும், கட்டாந்தரையில் பாய் விரித்தே படுத்தார்”, என்று அவரது நண்பரான அப்பாசாமி பிள்ளை எழுதியிருக்கிறார்.
1875ஆம் ஆண்டு தனகோடி ‘Elements of Hygiene’ நூலை எழுதினார். பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் வெகு எளிய மொழி நடையில் எழுதப்பட்ட இந்த கையேடு, மக்கள் மேற்கொள்ள வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. நூலின் முக்கியத்துவம் உணர்ந்த இந்திய மருத்துவத்துறையின் பொதுக் கண்காணிப்பாளர், மதராஸ் மாகாணத்தின் தலைமைச் செயலருக்கு 15 ஜனவரி, 1868 அன்று சிபாரிசுக் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் இந்த நூல் 3000 பிரதிகள் அச்சிடப்பட்டு, 2000 பிரதிகள் விற்கப்பட்டுவிட்டது என்றும், நூலின் அவசியம் கருதி, அரசு இந்த நூலை வாங்கி மக்களுக்கு ஆட்சியர்கள் மூலம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
அரசும் இதை ஒப்புக்கொண்டு மாகாணத்தின் தென் மாவட்டங்களுக்கு வழங்க 1000 பிரதிகளை வாங்கியதுடன், அடுத்த பதிப்பிலும் அதே அளவு பிரதிகளை வாங்குவதாக வாக்களித்தது. மாகாணத்தின் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யவும் அறிவுறுத்தியது. இந்த நூலுக்கு முன்னுரை எழுதியவர்களில் தனகோடியின் குருவான கிருயிக்ஷாங்கின் நெருங்கிய நண்பரான ராபர்ட் கால்டுவெல்லும் ஒருவர். அதில், “ஐரோப்பாவில் பயன்பாட்டிலுள்ள மருத்துவ முறைகளை இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு புரிந்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. எளிய மக்களுக்குப் புரியும் வகையில் மிகத் தெளிவாக எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், அவர்களுக்குப் பயனுள்ளது”, என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஐடா ஸ்கட்டரின் தந்தை எஸ்.டி.ஸ்கட்டரும் இந்த நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். மதராஸ், காஞ்சி, சிதம்பரத்திலுள்ள பச்சையப்பன் பள்ளிகளிலும், திருச்சி எஸ்.பி.ஜி. பள்ளியிலும், மதராஸ் விஜயநகரம் பெண்கள் பள்ளியிலும் தனகோடி எழுதிய இந்த நூல் பாடநூலாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது!
*
தனகோடியின் நூல் குறித்து ராபர்ட் கால்டுவெல்
*
ஆசிரியர் உரையில் இந்த நூலில் ஆங்காங்கே பெரிய அளவிலான எழுத்துகள் தேவை கருதி பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தனகோடி எழுதியிருக்கிறார். இளம் சிறாருக்கு எளிதாக புரியக்கூடிய வகையிலும், அவர்கள் மனதில் பதியும் வகையிலும் முக்கியக் கருத்துகள் அவ்வாறு அச்சிடப்பட்டுள்ளன என்று விளக்கியிருக்கிறார். தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் கூட பதிப்பாளர்களுக்கு இவ்வாறு இரு வேறு அளவு எழுத்துகள் அச்சிடுவது கூடுதல் வேலை தான். ஆனால் சிறுவயதினருக்கும் புரியவேண்டும் என்பதற்காக, இத்தனை மெனக்கிட்டு இந்த நூலை டைப்-செட் காலத்தில் இரு வேறு அளவுள்ள எழுத்துகள் கொண்டு அச்சிட்டிருப்பது உண்மையில் இளம் சமுதாயத்தின் பால் தனகோடி கொண்டிருந்த அக்கறையைக் காட்டுகிறது!
*
நூலின் தன்னுரையில் தனகோடி ராஜு
*
டி. மகாதேவ ராவ், ராமையங்கார், டி. முத்துசாமி ஐயர், ராமச்சந்திர ஐயர், ரங்கநாத முதலியார் என்று அன்றைய மதராஸின் பெரும் செல்வாக்கு மிகுந்த மனிதர்களின் நட்பு தனகோடிக்குக் கிடைத்தது. திருவிதாங்கூர் அரசரும் தனகோடியின் நண்பரானார். தனகோடியின் சாந்தோம் வீட்டில் திருவிதாங்கூர் அரசர் தங்கிச் செல்வது வாடிக்கையானது! மனைவியின் நகையை விற்று வாழ்க்கை நடத்திய நிலையிலிருந்த தனகோடி, வணிகத்தின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார்.
திருவனந்தபுரத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்றை நண்பரான திருவிதாங்கூர் மன்னரின் தொடர்பு காரணமாக தனகோடியால் எளிதில் தொடங்க முடிந்தது. உப்பின் விலையை ஆங்கிலேய அரசு வரி விதித்து ஏற்றியபடி இருக்க, தனகோடி குலசேகரன்பட்டினம் மற்றும் காயல்பட்டினத்தில் உப்புத் தொழிற்சாலைகளைத் தொடங்கி உப்பு வணிகத்தை மேற்கொண்டார். இதன் காரணமாக குறைந்த விலையில் அவரால் மக்களுக்கு உப்பு விற்க முடிந்தது. தன் நண்பர்களிடம் நிதி பெற்றே இந்த வணிகங்களில் தனகோடி முதலீடு செய்தார்.
அவரது பெரும் புரவலராக இருந்தவர் மிட்டாதாரான அப்பாசாமி பிள்ளை. மதராஸில் பெரும் இரும்புத் தொழிற்சாலை ஒன்றையும் தனகோடி நிறுவினார். அவரது மகனான டேவிட் தனகோடி ராஜு அதன் பணிகளைக் கவனித்து வந்தார். ‘ஹைடிரோபதி’ என்ற நீர் மூலம் நோய்களை குணப்படுத்தும் மருத்துவ முறை மேல் தனகோடிக்கு பெரும் ஆர்வமிருந்தது. தன் வாழ்வின் இறுதிவரை பாளையங்கோட்டையில் ஹைடிரோபதி மருத்துவமனை ஒன்றையும் நடத்திவந்தார்.
சென்னை மாகாணத்தின் முதல் பேசும், கேட்கும் திறன் குறைந்தோருக்கான பள்ளியை பாளையங்கோட்டையில் 1895ஆம் ஆண்டு ஃப்ளாரன்ஸ் ஸ்வெயின்சன் என்ற மிஷனரி தொடங்கினார். இந்தப் பள்ளியை விரிவாக்கும் பொருட்டு, இங்கிலாந்திலிருந்து தன் ஃபர்லோ எனப்படும் ஓய்வு காலத்தில் நிதி திரட்டிக்கொண்டு வந்தார். அவரிடமிருந்த 4500 ரூபாய் பணத்துக்கு பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு எதிர்ப்புறமுள்ள மருத்துவர் தனகோடி ராஜு கிளினிக் நடத்தி வந்த 14 ஏக்கர் நிலத்தை, அவரிடமிருந்து 1897ஆம் ஆண்டு வாங்கியதாகப் பதிவு செய்திருக்கிறார் ஃப்ளாரன்ஸ்.
அதே போல 1913ஆம் ஆண்டு சாந்தோம் லேலண்ட் கார்டன் பகுதியில் செயின்ட் பீட்ஸ் பள்ளி இயங்கி வந்த டாக்டர் தனகோடி ராஜுவின் மாளிகையை வாங்கி மதராஸின் முதல் பேசும், கேட்கும் திறன் குறைந்தோருக்கான பள்ளியைத் தொடங்கியவர் இவரே.
இவை எல்லாவற்றையும் விட முத்தாய்ப்பாக, வெறும் கையோடு மதராஸ் வந்து வாழ்க்கையைத் தேடிக்கொண்ட தனகோடி ராஜு செய்த பெரும் சாதனை- ஸ்டீமர் கப்பல் நிறுவனம் ஒன்றை முதன்முதலில் மதராஸ் மாகாணத்தில் தொடங்கியது தான்! “இரண்டு கப்பல்களை வாங்கி, அவற்றை தூத்துக்குடி- கொழும்பு தடத்தில் தனகோடி இயக்கினார். இதனால் வேறு வழியின்றி ஆங்கிலேயரின் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி வாரம் ஒருமுறை இயக்கிய தன் கப்பலை, போட்டி காரணமாக தினமும் இயக்கத் தொடங்கியது”, என்று தன் நூலில் தனகோடியின் கப்பல் நிறுவனம் பற்றி எழுதியிருக்கிறார் அப்பாசாமி பிள்ளை.
அவரது கூற்றை சரியே என்று ஊர்ஜிதம் செய்கிறார் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு எழுதிய ஆர்.ஏ.பத்மநாபன். தென்னிந்தியாவில் ஆங்கிலேயரின் கப்பல் துறை ஆதிக்கத்தை எதிர்த்து சிதம்பரம் பிள்ளைக்கு முன்பே சிலர் கப்பல்கள் ஓட்டியதாகச் சொல்கிறார். “1890களில் பொதுமக்களின் ஆர்வத்துக்கிணங்க தூத்துக்குடியைச் சேர்ந்த இந்திய கிறிஸ்துவப் பெருமகனான டாக்டர் தனகோடி ராஜு சுதேசிக் கப்பல்கள் இயக்கினார்”, என்று அவர் எழுதியிருக்கிறார்.
தனகோடிக்கு முன்பே ஆத்தங்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட பர்மா மௌல்மெய்ன் நகரைச் சேர்ந்த ந.மு. கம்பெனி கப்பல் இயக்கியிருக்கிறது. நாகப்பட்டினம் முதல் காக்கிநாடா வரை 810 டன் பருத்தியை கப்பல் மூலம் இந்நிறுவனம் அனுப்பியது என்றும் பத்மநாபன் எழுதியிருக்கிறார். இதன் மூலம் தென்னிந்தியாவின் முதல் பயணிகள் கப்பலை இயக்கிய நிறுவனம் தனகோடி ராஜுவின் நிறுவனம் தான் என்று அறியவருகிறது.
வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல் கம்பெனி 1906ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என பத்மநாபன் எழுதியிருக்கிறார். வ.உ.சி மற்றும் பாரதியின் சமகாலத்தவரும், அவர்களது நெருங்கிய நண்பருமான விடுதலைப் போராட்ட வீரர் சுரேந்திரநாத் ஆரியா, தனகோடி ராஜுவின் மகனான எத்திராஜ் என்றும் சொல்லப்படுகிறது. (இதற்கு ஆதாரங்கள் தெளிவாக இல்லை)
*
ஐரோப்பிய மனைவியுடன் சுரேந்திரநாத் ஆர்யா
*
1875ஆம் ஆண்டு மதராஸ் பல்கலைக்கழகத்தின் ‘ஃபெல்லோ’ பதவிக்கு தனகோடி ராஜு நியமிக்கப்பட்டார். 1887-1888 ஆண்டுகள் ஐரோப்பாவில் நெடும் பயணம் மேற்கொண்டார் தனகோடி. 1889ஆம் ஆண்டு ராவ் பகதூர் பட்டத்தை தனகோடிக்கு அளித்தது ஆங்கிலேய அரசு. 1893ஆம் ஆண்டு விக்டோரியா ராணியின் இள வயது வாழ்க்கை சரிதத்தை ‘The Early Years Of Queen Empress Victoria and Prince Albert’ என்ற நூலையும் தனகோடி ராஜு எழுதினார். மிகச் செறிவான ஆங்கில நூல் இது என்று அறிஞர்கள் பாராட்டியிருக்கிறார்கள். தற்போது இங்கிலாந்து ‘Royal Collection Trust’ மூலம் இந்நூல் விற்பனை செய்யப்படுகிறது.
தனகோடி ராஜு எப்போது, எப்படி மறைந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. 1897ஆம் ஆண்டு தனகோடி ராஜுவிடமிருந்து ஹைடிரோபதி கிளினிக்கை ஸ்வெயின்சன் வாங்கியதைக் கணக்கில் கொண்டும், அதன் பின் 1913ஆம் ஆண்டு அவரது சாந்தோம் மாளிகையை குடும்பத்தாரிடமிருந்து ஸ்வெயின்சன் வாங்கியதை கொண்டும் 1897-1913க்கு இடைப்பட்ட காலத்தில் அவர் மறைந்திருக்கக் கூடும் என்று கணிக்கலாம்.
அவருடைய மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம், அதன் வாரிசுகள் என்ன ஆனார்கள் என்ற தகவலை சில மாதங்களாக நானும் தேடிவருகிறேன். அவரைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றால் மட்டுமே அவரது முழு ஆளுமையை நாம் தெரிந்துகொள்ள இயலும். தென்னிந்தியாவின் முதல் பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுத்த தனகோடி ராஜு, எங்கோ யார் நினைவுகளிலோ புதைந்து கிடக்கிறார். அவர் வசித்த சாந்தோம் மாளிகை, அவருடைய புகழை மட்டுமல்லாமல், சென்னை நகரின் மாற்றுத் திறனாளிகளுக்கான முதல் பள்ளி என்ற பெருமையையும் உடையது. 2010ஆம் ஆண்டு பத்மநாபா கமிட்டி அறிவித்த பாதுகாக்க வேண்டிய சென்னை நகரின் மரபு சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. இத்தனை பெருமை வாய்ந்த இந்த மாளிகை தன் இறுதி மூச்சை ஆழமாக இழுத்து விட்டபடி சாந்தோமில் இருட்டுக்குள் புதைந்து கிடக்கிறது. நகரின் அழிந்துகொண்டிருக்கும் முக்கிய மரபுச் சின்னங்களில் ஒன்றான இதை புனரமைப்பதன் மூலம், சென்னையின் வரலாற்றையும், மரபையும், மாண்பையும் மீட்டெடுக்க முடியும்.
**((கட்டுரையாளர் குறிப்பு))**
**
நிவேதிதா லூயிஸ்
**
சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த “முதல் பெண்கள்” என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் “ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை” என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொளிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.
�,”