<டி20 தொடரை வென்ற இலங்கை!

entertainment

கடைசி டி20 போட்டியில் இந்திய அணியை 81 ரன்னில் சுருட்டி வெற்றி கண்ட இலங்கை அணி தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று இரவு (ஜூலை 29) நடந்தது.

இந்திய அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குருணல் பாண்ட்யா மற்றும் அவருடன் தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா, யுஸ்வேந்திர சாஹல் உள்பட 8 முன்னணி வீரர்கள் இந்த ஆட்டத்திலும் ஒதுக்கப்பட்டனர். மேலும் இரண்டாவது டி20 கிரிக்கெட்டில் பீல்டிங்கின்போது வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி இடது தோள்பட்டையில் காயமடைந்ததால் அவரையும் சேர்க்க இயலவில்லை. இதனால் இந்திய ஆடும் லெவன் அணிக்கு ஒரு வீரர் பற்றாக்குறை ஏற்பட்டது. வேறுவழியின்றி வலை பயிற்சிக்கு அழைக்கப்பட்டு இருந்த வீரர்களில் ஒருவரான வேகப்பந்து வீச்சார் சந்தீப் வாரியர் அறிமுக வீரராக இடம்பிடித்தார்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் தவான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய போதிய அனுபவம் இல்லாத இந்திய வீரர்கள், மந்தமான இந்த ஆடுகளத்தில் இலங்கையின் சுழல் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திண்டாடினர். முதல் ஓவரிலேயே கேப்டன் ஷிகர் தவான் (0) வீழ்ந்தார்.

அதன் பிறகு தேவ்தத் படிக்கல் (9 ரன்), சஞ்சு சாம்சன் (0), ருதுராஜ் கெய்க்வாட் (14 ரன்), நிதிஷ் ராணா (6 ரன்) வரிசையாக விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். 36 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தள்ளாடியது.

இதைத் தொடர்ந்து புவனேஷ்வர்குமாரும் (16 ரன்), குல்தீப் யாதவும் (23 ரன், நாட்-அவுட்) இரட்டை இலக்க பங்களிப்பு அளித்து சற்று ஆறுதல் அளித்தனர்.

20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 81 ரன்னில் முடங்கியது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 4 ஓவர்களில் வெறும் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஹசரங்காவுக்கு நேற்று 24ஆவது பிறந்த நாளாகும்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் இந்தியாவும், இரண்டாவது ஆட்டத்தில் இலங்கையும் வெற்றி பெற்றிருந்தது.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இலங்கை வென்றது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *