எஸ்பிபி எப்படி இருக்கிறார்?: மருத்துவமனை தகவல்!

Published On:

| By Balaji

புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று (ஆகஸ்ட் 22) மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் சென்னை எம்.ஜி.எம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

அவரது உடல் நிலை கவலைக்கிடமான நிலையில், திரையுலகினர், ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் எஸ்பிபி குணமடையப் பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை எஸ்பிபியின் உடல்நிலை சீராக இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்தது.

இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் பாலசுப்ரமணியம் தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. அவரை பன்முக மருத்துவர்கள் வல்லுநர் குழு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

அமெரிக்கா , இங்கிலாந்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உலகில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பலரும் எக்மோ சிகிச்சையால் குணமடைந்துள்ளனர். எனவே சர்வதேச மருத்துவ குழுவினர் எங்களது மருத்துவ குழுவினருடன் இணைந்து தொடர்ந்து எஸ் பி பாலசுப்ரமணியத்திற்குச் சிகிச்சை வழங்கி வருகிறார்கள் என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-கவி பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share