Hஎஸ்பிபியின் தற்போதைய நிலை!

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்பிபியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 22 நாட்களாகச் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் தற்போது அவர் குணமடைந்து வருவதாக, எம்ஜிஎம் மருத்துவமனையும், அவரது மகன் எஸ்பிபி சரணும் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை, பாடகர் எஸ்பிபி தொடர்ந்து உயிர் காக்கும் கருவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது என்று அறிக்கை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து எஸ்பிபி சரண் வெளியிட்ட வீடியோவில், “நேற்று மதியம் மருத்துவமனைக்குச் சென்று அப்பாவுக்கு சிகிச்சை தரும் ஒட்டுமொத்த மருத்துவக் குழுவையும் சந்தித்துப் பேசினேன். அப்போது இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்தபோது எந்த நிலையிலிருந்தாரோ, அதை விட தற்போது தேறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது நுரையீரல் செயல்பாட்டில் முன்னேற்றம் இருப்பதாகவும் கூறினர்.

மயக்க நிலை இன்றி விழிப்புடன் இருக்கிறார். என்னிடம் எதையோ சொல்வதற்காக எழுத முயன்றார். இந்த வாரத்திற்குள் எழுத்து மூலம் என்னிடம் பேசுவார் என்று நம்புகிறேன். தினமும் செய்தித்தாள்களைப் படித்துக் காட்டச் சொல்லி இருக்கிறேன். அவர் பாடலை கேட்டு கை அசைக்கிறார். இவை எல்லாம் அவர் நலம் பெறுவதற்கான முதல்படி. வேகமாக இல்லை என்றாலும் கண்டிப்பாக படிப்படியாக அப்பா மீண்டு வருவார். இதற்கான நம்பிக்கையை எம்ஜிஎம் மருத்துவமனை கொடுத்திருக்கிறது” என்று தெரிவித்தார் எஸ்பிபி சரண்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share