கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னை எம்.ஜி.எம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி. சரண் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 19) எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
மருத்துவ வல்லுநர் குழு தொடர்ந்து எஸ்.பி.பி.யின் உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும் அதில் கூறியுள்ளது.
இதனிடையே இசையமைப்பாளர் இளையராஜா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எஸ்.பி.பி.க்காக நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிற கூட்டுப் பிரார்த்தனையில் நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு அவருக்கு பிடித்த எஸ்.பி.பி பாடிய பாடலைப் பாடி பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
**-கவிபிரியா**�,