கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெறும் எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், முன்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாதிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எஸ்.பி.பி தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக எனக்கு லேசான அசௌகரியம் இருந்தது. சளி மற்றும் மூக்கடைப்பு பிரச்சினை ஏற்பட்டது. விட்டுவிட்டுக் காய்ச்சலும் இருந்தது. எனவே மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் லேசான கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டிலேயே மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டு, தனிமைப்படுத்திக் கொண்டால் சரியாகி விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் வீட்டில் அனைவரும் இருக்கும் நிலையில், அவர்கள் என்னைத் தனிமையில் விட்டுவிட மாட்டார்கள். அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது உடல் நிலை சீராக இருக்கிறது. இரண்டு மூன்று தினங்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன். யாரும் கவலைப்பட வேண்டாம், யாரும் என்னைத் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் பாலசுப்ரமணியம் உடல்நிலையில் நேற்று இரவு முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையிலிருந்து வருகிறார். செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு மருத்துவ நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து, அவரது உடல் உறுப்புகள் மற்றும் ரத்த ஓட்டம் ஆகியவற்றை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் , நடிகர் விஷார், ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-கவிபிரியா**
�,”