மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் பாதிக்கும் நிலை!

entertainment

வரும் ஜுன் 1 ஆம் தேதி முதல் தென்னிந்திய டிவி அவுட்டோர் யூனிட் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சினி அண்ட் டிவி அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன் யூனியனை தங்களது அமைப்பில் இருந்து நீக்கப் போவதாக பெப்சி அமைப்பு எச்சரிக்கைக் கடிதம் கொடுத்திருப்பதும், அவுட்டோர் டெக்னீஷியன் யூனியனில் இருந்து போதுமான ஊழியர்கள் வேலைக்கு வராமல் இருப்பதை கண்டித்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தென்னிந்திய டிவி அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், “கடந்த சில வருடங்களாகவே திரைப்பட படப்பிடிப்புகளுக்கு லைட்மேன், மற்றும் டெக்னீஷியன்கள் சரிவர வேலைக்கு வராததால் அதிக எண்ணிக்கையில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சம்பள உயர்வுக்குப் பின்னரும் தொழிலாளர்கள் பற்றாக்குறை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதனால் படப்பிடிப்புக்கு அனுப்பும் உபகரணங்களுக்கான தொழிலாளர்களை அனுப்புவதில் ஆட்கள் கிடைக்காமல், குறிப்பிட்ட கால்ஷீட் நேரத்துக்குள் யூனிட்டை அனுப்பி வைப்பது எங்களது சங்கத்தைச் சேர்ந்த அவுட்டோர் யூனிட் உரிமையாளர்களுக்கு பெரும் சவலாக உள்ளது.

மதியம் 2 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணி கால்ஷீட்டுகளுக்கு சுத்தமாக தொழிலாளர்கள் வேலைக்கு வருவதே இல்லை. இது சம்பந்தமாக கடந்த மார்ச் மாதமே உங்களது சங்க நிர்வாகிகளிடத்தில் நேரில் விளக்கம் அளித்தோம்.

மேலும் லைட்மேன் சங்க நிர்வாகிகளை கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று அழைத்துப் பேசிய பின்னரும், அவர்கள் இப்போதுதான் தங்களது சங்கத்தின் தொழிலாளர்களை வாட்ஸ்அப்பில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனெனில் மொத்தம் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கும் அந்தச் சங்கத்தில் தற்போது வேலை பார்ப்பதே வெறும் 600 தொழிலாளர்கள்தான். இனிமேலும் எங்களால் இந்த நிலைமையைச் சமாளிக்க முடியாது.மற்றும் திரைப்பட தொழிலாளர் நலனுக்காக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், நாங்களும் இணைந்து உருவாக்கிய தமிழ்நாடு சினி டிவி அவுட்டோர் டெக்னீஷியன் யூனியனை பெப்சி அமைப்பில் இருந்து நீக்கிவிடுவோம் என்று மிரட்டல் தொனியில் எச்சரிக்கும் கடிதம் பெப்சி அமைப்பில் இருந்து வந்துள்ளது.

/தற்போது நமக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் தமிழ்நாடு சினி அண்ட் டிவி அவுட்டோர் டெக்னீஷியனை முடக்கும் செயலில் பெப்சி அமைப்பு இறங்கியுள்ளது.
இது சார்ந்த அனைத்து விஷயங்களிலும் ஒரு நல்ல முடிவை எடுக்கும்விதமாக வரும் ஜூன் 1-ம் தேதி முதல் எங்களது செளத் இந்தியன் டிவி அவுட்டோர் யூனிட் ஓனர்ஸ் அசோஸியேஷன் உறுப்பினர்கள் யாரும் படப்பிடிப்புகளுக்கு உபகரணங்களை அனுப்புவதில்லை என முடிவு செய்திருக்கிறோம் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

பெப்ஸி அமைப்புக்கும் தமிழ்நாடு சினி அண்ட் டிவி அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன் அமைப்புக்கும் என்ன பிரச்சினை என்று விசாரித்தபோது, அந்தச் சங்கத்தினர் தங்களது சங்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான கட்டணமாக மூன்று லட்சம் ரூபாயை வசூலிக்கும்படி பெப்ஸி சொல்கிறதாம். உறுப்பினர்களின் கட்டணத்தை இப்படி அதிரடியாக உயர்த்தியதற்காக அவுட்டோர் யூனிட் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால்தான் எங்களது அறிவுறுத்தலை ஏற்காவிட்டால் எங்களது அமைப்பில் இருந்து உங்களது சங்கத்தை நீக்கிவிடுவோம் என்று பெப்ஸி அமைப்பு, டெக்னீஷியன் யூனியனுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. தற்போது அவுட்டோர் யூனிட் உரிமையாளர்கள் சங்கத்தினரின் இந்தத் முடிவால், வரும் ஜுன் 1–ம் தேதி முதல் படப்பிடிப்புகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக சினிமா, டிவி படப்பிடிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வேலை நிறுத்தம் நடந்தால் அது திரைப்பட துறையில் இருக்கும் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

**அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *