நடிகர் சூரி தான் ஊடகங்களையும், தமிழ் சினிமாவையும் இன்று தட்டி எழுப்பியிருக்கிறார். இன்று காலையிலேயே அடையார் காவல் நிலையத்திற்கு வந்த நடிகர் சூரி, ‘ஐயா, என்னிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி இரண்டே முக்கால் கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிவிட்டார்கள். அவர்கள் மீது புகார் கொடுக்க வேண்டும்’ என அடையாறு காவல் நிலையத்திற்குச் சென்றிருக்கிறார்.
போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்வது பற்றி சூரி எப்போதும் கவலைப்பட்டதில்லை. கொரோனா பாதிப்பின் முதல் கட்டத்தின்போது, ஏழை மக்களுக்கு பலவாறு உதவிய திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்குச் சென்று அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் உட்பட அனைத்து காவல் துறையினரிடமும் ஆட்டோகிராஃப் வாங்கினார் சூரி. சினிமா ஹீரோ, எங்களிடம் ஏன் ஆட்டோகிராஃப் வாங்குகிறீர்கள் என்று அவர்கள் கேட்டபோது ‘நாங்க சினிமாவுல தாங்க ஹீரோ. இப்படியொரு பிரச்சினைல எதுவும் செய்யாம முடங்கிட்டோம். ஆனா, இப்பவும் போராடிக்கிட்டு இருக்க நீங்க தான் ரியல் ஹீரோ’ என்று சொல்லிவிட்டு வந்தார்.
அன்று காவல்துறையின் மீதான அதீத ஆர்வத்தில் காவல் நிலைய படிக்கட்டுகளை ஏறிய சூரி, இப்போது அதீத நம்பிக்கையுடன் மீண்டும் ஏறியிருக்கிறார். இதற்குக் காரணம், ‘ஒரு லேண்டு குறைந்த விலைக்கு வருகிறது. இப்போது வாங்கினால் எதிர்காலத்தில் நல்ல விலைக்குப் போகும்’ என சூரியின் ஆசையைத் தூண்டி, அந்தப் பணத்தை ஏமாற்றியவர்கள் மீது புகார் கொடுப்பது தான். முக்கியமான தயாரிப்பாளர் உட்பட மூவர் மீது சூரி புகார் கொடுத்திருக்கிறார்.
சூரியிடம் அனைத்து விதமான தகவல்களையும் பெற்றுக்கொண்ட காவல்துறை சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அவரை அனுப்பி வைத்திருக்கின்றனர். மொத்த கோடம்பாக்கமும் இப்போது சூரியிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறது போல. நாம் அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோது பிஸியாக இருப்பதாக எதிர்முனையில் IVR பேசியது.
-மதன்-�,