வெற்றிமாறனுக்கு கடைசியாக திரையரங்க ரிலீஸாக தனுஷ் நடித்த அசுரன் வெளியானது. தற்பொழுது, சூரி நாயகனாக நடிக்கும் படத்தின் பணிகளில் இருக்கிறார். சூரி ஹீரோவாக நடிக்க முக்கிய ரோலில் விஜய்சேதுபதி நடிக்கிறார். படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இளையராஜா துவங்கிய புதிய ஸ்டுடியோவில் முதல் இசைக்கோர்ப்புப் பணி இந்தப் படத்துக்கு தான் நடந்துவருகிறது.
சூரியோடு பாரதிராஜா நடிக்க இருப்பதாகவே முதலில் சொல்லப்பட்டது. ஆனால், காடுகளில் படப்பிடிப்பு நடப்பதால் கடும் குளிர் காரணமாகப் படத்திலிருந்து விலகினார். இந்நிலையில், வடசென்னையில் இணைய வேண்டிய வெற்றிமாறன் – விஜய்சேதுபதி கூட்டணியானது இந்தப் படத்தின் மூலம் கைகூடியது. படத்துக்கான முதல் கட்டப் படப்பிடிப்பை சத்தியமங்கலம் காடுகளில் நடத்திமுடித்துவிட்டு திரும்பிவிட்டது படக்குழு. இந்நிலையில் , அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதே தெரியாத சூழல் நிலவுகிறது.
இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்கு லைட் மேன், கேமிரா உதவியாளர்கள் உட்பட தொழில் நுட்பக் கலைஞர்களை அழைத்தால் வரமுடியாது என்கிறார்களாம். அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. சத்தியமங்கலத்தின் அடர் காடுகளில் படப்பிடிப்பு நடக்கிறதாம். படப்பிடிப்புத் தளத்துக்கும் தங்கியிருக்கும் இடத்துக்குமே பல கிலோமீட்டர் தொலைவு. இதனால், தினமும் சென்று வர வேண்டியிருக்கிறது. அதோடு, கொசுத் தொல்லையும் அதிகமாக இருக்கிறதாம்.
பல்வேறு சவால்களை சந்தித்தே முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறது படக்குழு. ஆனால், சென்னையில் படப்பிடிப்பு நடந்தால் எந்த சம்பளம் தரப்படுமோ அந்தச் சம்பளத்தைதான் காட்டுப் பகுதியில் நடக்கும் படப்பிடிப்புக்கும் கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன். இதனால் தான், தொழில் நுட்பக் கலைஞர்கள் செம அப்செட்.
கொஞ்சமாவது ஊதியத்தில் உயர்வு இருந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்களாம். இந்தக் காரணத்தினால், வெற்றிமாறன் படத்துக்கு செல்ல தயக்கம் காட்டுகிறார்களாம் கலைஞர்கள். வெற்றிமாறன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே தீர்வு எட்டும் என்று சொல்கிறார்கள்.
– ஆதினி�,