மாடுகளுக்கு பதில் மகள்கள்: விவசாயிக்கு உதவிய சோனு சூட்

entertainment

ஊரடங்கால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் பாலிவுட் நடிகர் சோனு சூட், தற்போது மாடுகளுக்குப் பதில் மகள்களைப் பூட்டி ஏர் உழுத விவசாயிக்கு உதவி செய்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஸ்வர் ராவ்.

மகாரஜுபள்ளி பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாகேஸ்வர் ராவ், 17 ஆண்டுகளுக்கு முன்பு மதனபள்ளி நகருக்குப் பிழைப்புத் தேடி குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இவருக்கு வெண்ணிலா (20), சந்தனா (18) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். மதனபள்ளியில் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வந்த நாகேஸ்வர் ராவ், நாள் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் சம்பாதித்து வந்தார்.

இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே, இவரின் டீக்கடை திறக்கவே முடியாமல் போனது. இதுநாள் வரை சேர்த்து வைத்திருந்த பணம் ஊரடங்கில் செலவாகிவிட்ட நிலையில், நாகேஸ்வர் ராவின் குடும்பம், அடுத்த வேளை உணவுக்குக் கூட வழி இல்லாமல் தவித்தது. எனவே மதனபள்ளியை விட்டு மீண்டும், தன் சொந்த ஊரான மகாராஜுபள்ளிக்கு குடும்பத்துடன் நாகேஸ்வர் ராவ் வந்து சேர்ந்தார்.

This family doesn’t deserve a pair of ox 🐂..
They deserve a Tractor.
So sending you one.
By evening a tractor will be ploughing your fields 🙏
Stay blessed ❣️🇮🇳 @Karan_Gilhotra #sonalikatractors https://t.co/oWAbJIB1jD

— sonu sood (@SonuSood) July 26, 2020

கடந்த சில நாள்களாக ஆந்திராவில் நல்ல மழை பெய்து வந்ததால் தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிர் செய்யத் திட்டமிட்டார். ஆனால், அவரிடம் நிலத்தை உழும் டிராக்டர், எருது என எதுவுமே இல்லாமல் போக, விவசாயம் செய்யும் முயற்சியைக் கைவிட்டுள்ளார். இந்தத் தகவலை அறிந்த அவரின் இரண்டு மகள்களும் தங்களை வைத்து ஏர் பூட்டி நிலத்தை உழும்படி தந்தையிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளனர். இதையடுத்து நாகேஸ்வரின் இரு மகள்களும் நிலத்தில் ஏர் உழும் வீடியோ வெளியாகி பலரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நாகேஸ்வர் கூறுகையில், “ஊரடங்கினால் நான் என் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்துவிட்டேன். அதனால் சொந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். அதற்காக எருது வாடகைக்குக் கேட்டபோது நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய் கேட்டனர். அதேபோல் டிராக்டருக்கு 1,500 ரூபாய் கேட்டனர். அவ்வளவு தொகை என்னிடம் இல்லாததால் நான் விவசாயம் செய்ய நினைத்ததை விட்டுவிட்டேன். பின்னர் மகள்களும் , மனைவியும் உதவினர்” என்று தெரிவித்தார்.

மகள்களைப் பூட்டி ஏர் உழுத விவகாரம் எதேச்சையாகப் பாலிவுட் நடிகர் சோனுவின் கண்ணில், பட அவர் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மாலை உங்கள் நிலத்தில் ட்ராக்டர் உழும்” என்று நேற்று (ஜூலை 26) காலை பதிவிட்டிருந்தார்.

கூறியபடியே, நேற்று மாலை அவர்களது வீட்டுக்கு டிராக்டரை வாங்கி அனுப்பியுள்ளார் சோனு சூட். இதனால் நாகேஸ்வர் குடும்பத்தினர் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், #SonuSoodRealHero என்ற ஹேஷ்டேக் மூலம் சோனு சூட்டுக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

சோனு சூட்டின் உதவியை அறிந்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, சோனுவை பாராட்டியதுடன், ஏர் உழுத இரு மகள்களும் கல்வியைத் தொடர உதவ முன்வந்துள்ளார்.

முன்னதாக, சாலையில் சிலம்பம் சுற்றி வயிற்றுப் பிழைப்புக்கு உதவிக் கேட்ட மூதாட்டியின் திறமையைப் பாராட்டி அவருக்குக் கலை பயிற்சி பள்ளி அமைத்து சோனு சூட் உதவ முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *