தமிழகத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் உறுப்பினர்களாக உள்ள சின்னத்திரை நடிகர்கள் சங்கத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்துக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் ரவிவர்மா தலைமையிலான அணி வெற்றி பெற்று பொறுப்பேற்றது. ஆனால், பதவியேற்ற சில மாதங்களிலேயே பலவித பிரச்சினைகளினால் இந்தச் சங்கம் செயல்படாமல் முடங்கிப்போனது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டங்களும் கூச்சல், குழப்பத்துடனேயே நடந்து முடிந்தன. இதனால் மீண்டும் இந்தச் சங்கத்துக்கு இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. முன்னாள் தலைவரான ஜி.சிவன் ஸ்ரீநிவாஸ் தலைமையில் ‘வசந்தம் அணி’ என்கிற பெயரில் ஓர் அணியும், நடிகர் ரவிவர்மா தலைமையில் ‘உழைக்கும் கரங்கள்’ என்ற பெயரில் ஓர் அணியும், ‘புதிய வசந்தம்’ என்ற பெயரில் நடிகர் ஆதித்யா என்.எஸ்.செல்வம் தலைமையில் ஓர் அணியுமாக… மொத்தம் மூன்று அணிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், இரண்டு துணைத் தலைவர்கள், நான்கு இணைச் செயலாளர்கள், 14 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் கமிட்டிக்கு இந்த மூன்று அணிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகின்றனர்.
நடிகர் ஜி.சிவன் ஸ்ரீநிவாஸ் தலைமையிலான ‘வசந்தம் அணி’யில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு போஸ் வெங்கட், பொருளாளர் பதவிக்கு நடிகர் விஜய் ஆனந்தும் போட்டியிடுகின்றனர்.
துணைத் தலைவர்கள் பதவிக்கு சோனியா போஸ் மற்றும் பரத் போட்டியிடுகின்றனர். இணைச் செயலாளர்கள் பதவிக்கு சதீஷ், சிவகவிதா, எம்.துரை மணி, சவால் ராம் ஆகிய நான்கு பேர் போட்டியிடுகின்றனர்.
உழைக்கும் கரங்கள் அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு ரவிவர்மா போட்டியிடுகிறார். எம்.டி.மோகன் செயலாளர் பதவிக்கும், வைரவராஜ் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.
துணைத் தலைவர்கள் பதவிக்கு ராஜ்காந்த், சி.என்.ரவிசங்கர் இருவரும் போட்டியிடுகின்றனர். துணைச் செயலாளர்கள் பதவிக்கு தேவி கிருபா, தீபா, ஜி.தினேஷ், சி.சரத் சந்திரா ஆகிய நால்வரும் போட்டியிடுகின்றனர்.
புதிய வசந்தம் அணியில் தலைவர் பதவிக்கு ஆதித்யா என்.எஸ்.செல்வம் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு அசோக் சாமுவேலும், பொருளாளர் பதவிக்கு வி.நவீந்தரும் போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு பி.ஜெயலட்சுமியும், சிந்து என்ற கெளரியும் போட்டியிடுகின்றனர். இணைச் செயலாளர்கள் பதவிக்கு எஸ்.நயினார் முகம்மது, ஷ்ரவன், நீபா, ரம்யா சங்கரும் போட்டியிடுகின்றனர்.
இதன்படி வரும் ஜனவரி 9ஆம் தேதி விருகம்பாக்கத்தில் இருக்கும் ஏ.கே.ஆர். மஹாலில் இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
**-இராமானுஜம்**
�,”