தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் வடிவேலுவுக்கு மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாகப் படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்த வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, அவர் படங்களில் நடிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகப் படங்களில் நடிக்காமலிருந்து வந்தார் வடிவேலு. சமீபத்தில் வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டு, அவர் மீண்டும் படங்களில் நடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான முயற்சியை லைகா நிறுவனம் மேற்கொண்டது.
இதன் காரணமாக அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் மூன்று படங்களில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதல் படமாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (naai sekar returns) படத்தில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் படப் பிரபலம் ரெடின், நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடிக்கின்றனர்.முழுக்க முழுக்க நகைச்சுவை படமாகத் தயாராக உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று(12.12.2021) பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் நடிகர் வடிவேலு, இயக்குநர் சுராஜ் உள்படப் படக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.
**-அம்பலவாணன்**
�,”