தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சிவக்குமார் தன்னை நாயகனாக நடிக்க வைத்து படங்களைத் தயாரித்த தயாரிப்பாளருக்கும், தனது நண்பரான தமிழறிஞர் ஒருவருக்கும் அவர்களின் தற்போதைய வாழ்க்கைக்கு உதவும் வகையில் அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறார்.
நடிகர் சிவக்குமார் 1965-ம் ஆண்டில் இருந்து திரைப்பட துறையில் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுவரையிலும் 200 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ்த் திரையுலகத்தில் சிறந்த மனிதராக பலராலும் போற்றப்படும் நடிகர் சிவக்குமார். தனது பால்ய கால நண்பர்களைத் தேடிக் கண்டு பிடித்து அவர்களுக்கு வெளியுலகம் தெரியாமல் பல உதவிகளைச் செய்து வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்புகூட 50 வருடங்களுக்கு முன்பு தன்னுடன் ஓவியக் கல்லூரியில் படித்த ஒரு நண்பரை சென்னை ராயப்பேட்டையில் தீவிர முயற்சிக்குப் பின் கண்டுபிடித்து அவரது வாழ்க்கைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்.
அதேபோல் தற்போது தன்னை வைத்து படமெடுத்த ஒரு தயாரிப்பாளருக்கும் பெரிய உதவியைச் செய்திருக்கிறார் நடிகர் சிவக்குமார். சமீபத்தில் தமிழக அரசு அளித்த சிறந்த தமிழறிஞர்களுக்கான விருது பெற்றவர்களில் இருவர் கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர்தான் சூலூர் கலைப்பித்தன். இவர் 1980-களில் நடிகர் சிவக்குமாரை ஹீரோவாக நடிக்க வைத்து 2 படங்களை தயாரித்தவர். இவர் தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதன் நினைவு பரிசினை பெற்றவர்.
தற்போது தனக்கு வரும் முதியோர் பென்சனை வைத்துக் கொண்டு ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். பேருந்தில் சலுகை கட்டணத்தில் சென்று வந்து கொண்டிருக்கிறார்.
இதேபோல் நடிகர் சிவக்குமாரின் நீண்ட நெடுங்கால நண்பர் புலவர் செந்தலை கவுதமன். இவர் தமிழக அரசின் பாரதிதாசன் விருதினை பெற்றிருக்கிறார் 69 வயதான புலவர். செந்தலை கவுதமன் தற்போதும் சைக்கிளில்தான் சென்று கொண்டிருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சூலூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் தலைமையேற்று இருவருக்கும் பரிசு கேடயம் வழங்கி கெளரவித்தார்.இந்த விழாவில்தான் இவர்கள் இருவரின் வாழ்க்கைச் சூழலுக்கும் உதவும் பொருட்டு இவர்கள் இருவருக்கும் ரூ.75,000/- மதிப்புள்ள டிவிஎஸ் 100 மோட்டார் சைக்கிளை பரிசளித்துள்ளார் நடிகர் சிவகுமார்.
**- இராமானுஜம்**