ரஜினிகாந்த் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு ’மாவீரன்’ படம்வெளியானது. தற்போது அதே தலைப்பு 35 வருடங்கள் கடந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர், டான் இரு படங்களும் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படங்களின் வியாபார மதிப்பை அதிகரித்தன.
தற்போது இவர் நடிக்கும் படங்களுக்கு குழந்தை முதல் பெரியவர்கள் வரை பார்வையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக பிரின்ஸ், அயலான் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். இது தவிர ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும், மண்டேலா பட இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.
இதில் மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவீரன் எனும் தலைப்புடன் கூடிய புரோமோ வீடியோவை பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய அந்த புரோமோ வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் ரவுடிகளிடம் அடிவாங்குவது போலவும், பின்னர் அவர்களை அடித்து துவம்சம் செய்வது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
–இராமானுஜம்