சொன்னதைச் செய்யும் சிவகார்த்திகேயன்.. டாக்டர் பட சம்பவம்!

Published On:

| By Balaji

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராக இருக்கும் படம் டாக்டர்”. கோலமாவு கோகிலா கொடுத்த நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன் , வினய், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

டாக்டர் படத்தின் படப்பிடிப்பானது சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. தற்பொழுது படமும் முழுமையாகத் தயாராகி, வருகிற பிப்ரவரி 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், படத்திற்கான தியேட்டர் விநியோக விற்பனையை துவங்கியிருக்கிறது பட தயாரிப்பு நிறுவனம். சிவகார்த்திகேயனின் முந்தைய படம் ஹீரோ. மித்ரன் இயக்கத்தில் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இந்தப் படம் பெரியளவில் தோல்வி அடைந்தது. அதனால், நஷ்ட ஈடாக பணத்தை திருப்பித் தர விநியோகஸ்தர்கள் கேட்டார்கள். அடுத்தப் படமான டாக்டர் ரிலீஸின் போது தருவதாகச் சொல்லி வாக்குறுதி கொடுத்திருந்தார்கள்.

இந்நிலையில், டாக்டர் படத்தின் வியாபாரம் துவங்கியதுமே, பழைய பாக்கியைக் கேட்டு விநியோகஸ்தர்கள் வந்துவிட்டார்கள். ஆனால், சொன்னதை நேர்மையாகச் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். முந்தையப் படத்தில் கொடுக்க வேண்டியத் தொகையைக் கழித்துவிட்டு இந்தப் படத்திற்கு விற்பனை செய்திருக்கிறார்கள். இதுவே, மற்ற நடிகரோ, தயாரிப்பு நிறுவமோ என்றால் பணத்தைக் கொடுக்காமல் தட்டிக் கழிப்பார்கள். விநியோகஸ்தரும் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் முட்டுக்கட்டைப் போடுவார்கள். அப்படித்தான் பல படங்கள் இறுதி நேரத்தில் ரிலீஸ் செய்யமுடியாமல் போகும். இப்படியான எந்தச் சிக்கலும் இல்லாமல் இருக்க நினைப்பதும், யாருக்கும் எந்த இடத்திலும் நஷ்டம் இல்லாமல் வியாபாரம் செய்வதும் ஆரோக்கியமான ஒன்றே.

தற்பொழுது, சிவகார்த்திகேயன் நடிப்பில் அட்லீயின் உதவி இயக்குநராக இருந்த சிபி சக்கரவர்த்தி இயக்குநராக அறிமுகமாகும் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு கோவையில் துவங்கி நடந்துவருகிறது. இந்தப் படத்திலும் ப்ரியங்கா மோகன் நாயகியாக நடித்துவருகிறார். அதோடு, சிவகார்த்திகேயன் நடித்துமுடித்திருக்கும் ‘அயலான்’ படமானது இந்த வருட இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

**- தீரன் **�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share