சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் தெரிய வந்துள்ளது.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், அனிருத் இசையில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், சமுத்திரகனி, சிவாங்கி உள்ளிட்ட பலரது நடிப்பில் திரைப்படம் நேற்று (மே 14) திரையரங்குகளில் நேரடியாக வெளியானது.
இளைஞர்கள் மத்தியிலும் குடும்பங்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிடிக்காத பொறியியல் படிப்பை தந்தைக்காக படிக்கும் கதாநாயகன் தனது லட்சியத்தை அடைய விரும்ப அவனுக்கும் தந்தைக்கும் இடையேயான உணர்வுபூர்வமான பாசப் போராட்டத்தில் இறுதியில் வென்றது யார் என்ன நடந்தது என்பதுதான் ‘டான்’ திரைப்படத்தின் கதை.
படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதுதான் படம் குறித்தான சமீபத்திய தகவல். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் முதல் நாள் நல்ல வசூலை பெற்ற இரண்டாவது திரைப்படமாக ‘டான்’ இருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ‘டான்’ படத்தின் முதல் நாள் வசூலாக 13 கோடியை வசூல் செய்துள்ளது. 2018 ஆம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் போல இதுவும் சிறந்த ஒன்றாகும்.
இந்த வாரம் வியாழன் அன்று வெளியான திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், வார இறுதி நாட்களில் முதல் நாள் வசூலை விட இன்னும் அதிகம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 600 திரையரங்குகளிலும் உலகம் முழுவதும் 900 திரையரங்குகளிலும் ‘டான்’ வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**