படப்பிடிப்புக்கு வரமுடியவில்லை: தயாரிப்பாளரிடம் சிம்பு உருக்கம்!

entertainment

கன்னடத்தில் வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப் படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இதில் சிலம்பரசன் நிழலுலக தாதாவாகவும் கவுதம் கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.

கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார்.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று தொடங்கப்பட்டது. அதன்பின், இயக்குநர் நார்தன் விலகிக் கொள்ள சில்லுனு ஒரு காதல் உட்பட சில படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் அப்படம் தொடரும் எனவும் அப்படத்துக்கு பத்துதல என்று பெயர் வைத்திருப்பதாகவும் அறிவித்தார்கள்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளைத் தாண்டி ஜூன் 6 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. படப்பிடிப்பு தொடங்கி மொத்தமாகப் படத்தை முடித்துவிடத் திட்டமிட்டிருந்தார்கள்.
இதற்காக, முடி அதிகமாக வளர்ப்பது தாடி வளர்ப்பது உடல் எடையைக் கூட்டுவது போன்று எல்லா விசயங்களையும் செய்து படப்பிடிப்புக்குத் தயாராகிவந்தார் சிலம்பரசன்.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக அவரது தந்தை டி.ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருடைய சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருக்கிறோம் என்று சிலம்பரசன் அறிக்கை விட்டிருந்தார்.இதற்காக அவர் முன்கூட்டியே அமெரிக்கா சென்றிருக்கிறார்.

இதனால், பத்துதல படத்தின் படப்பிடிப்பை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக அமெரிக்கா செல்லுமுன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை தொலைபேசியில் தொடர்புகொண்ட சிலம்பரசன், ஜூன் 6 இல் படப்பிடிப்பு தொடங்கி முழுமையாக முடித்துக் கொடுத்துவிடலாம் என்று நான் தயாராகி வந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. இப்போது நான் கூட இருந்து அவரைப் பார்த்துக் கொள்ளவேண்டும். எனவே, அப்பா சிகிச்சைக்காக வெளிநாடு போகிறோம். போய்வந்ததும் பத்துதல படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் அடுத்தவேலை என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

இதனை கேட்ட ஸ்டுடியோ கீரின் ஞானவேல்ராஜா நெகிழ்ந்துபோனதுடன் அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்

சிலம்பரசன் தகவல் சொல்லாமலே அமெரிக்கா கிளம்பிப் போயிருக்கலாம். அதற்கு மாறாக, ஒரு தயாரிப்பாளரின் வலியை உணர்ந்து நெருக்கடியான சூழலிலும் அவருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் சிலம்பரசன் பேசியிருக்கிறார். இந்த தகவல் அறிந்த படக்குழுவினர் அவரைப் பாராட்டிப் பேசிவருகிறார்கள்.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *