சிம்புவுக்கு இந்த வருட ஓபனிங்காக ‘ஈஸ்வரன்’ வெளியானது. இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கோ, இயக்குநர் சுசீந்திரனுக்கோ ‘ஈஸ்வரன்’ கைகொடுத்ததோ இல்லையோ நடிகர் சிம்புவுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்த படம்.
ஈஸ்வரன் படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து புதுப்புது வாய்ப்புகள் சிம்புவைத் தேடிவந்துகொண்டிருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ‘மாநாடு’ முடித்துவிட்டார். இந்தப் படம் அடுத்து திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், இரண்டு படங்களை அடுத்தடுத்து துவங்க இருந்தார் சிம்பு. ஒன்று, கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படமும், கெளதம் மேனன் இயக்கத்தில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படம். இவ்விரு படங்களில் பத்து தல முதலில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
புதிய திருப்பமாக, கெளதம்மேனன் படத்தை முதலில் துவங்குகிறார். இன்னொரு ஸ்ட்விஸ்டாக, புதிய படமொன்றும் ஒப்பந்தமாகியிருக்கிறார் சிம்பு.
நதிகளிலே நீராடும் சூரியன் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். பொதுவாக, ஐசரியிடம் சென்றாலே அடுத்தடுத்து இரண்டு படங்களை எப்படியாவது கமிட் செய்துவிடுவார். அதன்படி, கெளதம் மேனன் படத்தைத் தொடர்ந்து ஐசரிக்கு இன்னொரு படமும் நடித்துக் கொடுக்கிறார் சிம்பு.
அந்தப் புதிய படத்தை இயக்குநர் கோகுல் இயக்க இருக்கிறாராம். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா படங்களை இயக்கியவர் கோகுல். சமீபத்தில் கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க ‘கொரோனா குமார்’ எனும் படம் துவங்க இருந்தது. புது ட்விஸ்டாக, இந்த கொரோனா குமார் படத்தில் விஜய் சேதுபதிக்குப் பதிலாக நடிக்கத் தான் சிம்பு ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.
தமிழைத்தாண்டி தெலுங்கு, மலையாளம், இந்தி என செம பிஸியாக இருக்கிறார் விஜய்சேதுபதி. அதனால், கொரோனா குமார் படத்தில் சேதுபதி நடிப்பதில் காலதாமதமாகும் என்பதால் வேறு ஹீரோவைத் தேடிவந்திருக்கிறார்கள். விஜய்சேதுபதிக்கு இணையான ஹீரோவாக இருக்க வேண்டுமென விரும்பி, இறுதியில் சிம்புவை டிக் செய்திருக்கிறார்கள்.
சிம்புவுக்காக சுதாகொங்கரா, மிஷ்கின், ராம் மாதிரியான பெரும் இயக்குநர்கள் லைனில் காத்திருக்கிறார்கள். ஆனால், சிம்புவின் கணக்கு வேறொன்றாக இருக்கிறது. காஷ்மோரா, ஜூங்கா, அன்பிற்கினியாள் என தொடர்ச்சியாக சுமார் படங்களைக் கொடுத்துவரும் கோகுலுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் சிம்பு.
**-தீரன்**
�,