சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான ரேஷ்மா மற்றும் மதுமிதா இணைந்து நடிக்கவுள்ளனர்.
திரைப்படங்களில் நடித்து வந்தாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் கவனிக்கப்பட்டவர்கள் நடிகை ரேஷ்மா மற்றும் மதுமிதா. பல்வேறு விவாதங்களுக்கும் ஆரம்பப்புள்ளி வைத்த இவர்கள் இருவரும் சாந்தனு நடிக்கும் திரைப்படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
நடிகர் சாந்தனு தற்போது விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப்படம் கலாட்டா கல்யாணத்தை மையக் கருவாகக் கொண்டுள்ளது. புதுமணத் தம்பதிகளின் முதலிரவில் நடைபெறும் காமெடி கலாட்டா குறித்த கதையாக இந்தத் திரைப்படம் உருவாகவுள்ளது.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சாந்தனு, பாக்கியராஜ், அதுல்யா ரவி உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நடிகர் பாக்கியராஜ் தனது மகன் சாந்தனுவுடன் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப்படத்திற்கு தரண் இசையமைக்கிறார். மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், மதுமிதா போன்ற பல்வேறு திரை நட்சத்திரங்கள் இந்தத் திரைப்படத்தில் நடிக்கின்றனர். மேலும் யோகி பாபு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”