9ஷங்கரின் ஏழு நாட்கள்!

Published On:

| By Balaji

இந்தியன் 2 படப்பிடிப்புக்கு இடையே நிகழ்ந்த கோர விபத்து குறித்து வருத்தம் தெரிவித்த இயக்குநர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் பூந்தமல்லி அருகே ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்தது. கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி நடந்த படப்பிடிப்புக்கு இடையே கிரேன் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குநர் மது மற்றும் புரொடக்‌ஷன் அசிஸ்டெண்ட் சந்திரன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்ததுடன், பத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தங்கள் சக வேலையாட்களை இழந்து அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் நிலையில், விபத்து குறித்து கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் வருத்தம் தெரிவித்துவந்தனர். ஆனால் இத்தனை நாட்களாக விபத்து தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த இயக்குநர் ஷங்கர், இன்று(பிப்ரவரி 26) தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். பிப்ரவரி 19-ஆம் தேதி விபத்து நடந்தும் ஏழு நாட்களாக ஷங்கர் மெளனம் காத்து வந்ததன் காரணத்தை அந்தப் பதிவு உணர்த்தியுள்ளது.

அந்தப் பதிவில், “மிகப் பெரிய வருத்தத்துடன் ட்வீட் செய்கிறேன். மோசமான விபத்து நடந்த அந்த நாளில் இருந்து நான் அதிர்ச்சியில் இருக்கிறேன். எனது உதவி இயக்குநர், குழுவைச் சேர்ந்தவர்களின் மரணத்தை நினைத்து இன்று வரை என்னால் தூங்க முடியவில்லை. அந்த கிரேன் விபத்தில் இருந்து நூலிழையில் நான் தப்பித்தேன். ஒருவேளை அது என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் பிரார்த்தனைகள்” என்று குறிப்பிட்டுள்ளார். விபத்து நடந்து இத்தனை நாட்களாகியும் அதன் வலியில் இருந்து அவரால் மீண்டு வரமுடியவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

இந்தப் பதிவைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறனர். இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது என்று கூறாமல் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share