தான் மிகவும் விரும்பி ரசிக்கும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை ஒரு முறையாவது சந்திக்க விரும்புவதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தில் துவங்கி ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’,‘மயக்கம் என்ன’ என்று தனது வித்தியாசமான படைப்புகளால் ஏராளமான தமிழ் ரசிகர்களை சம்பாதித்தவர் இயக்குநர் செல்வராகவன். அவரது இயக்கத்தில் இறுதியாக சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ திரைப்படம் வெளியாகி இருந்தது. மேலும் அவர் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ‘மன்னவன் வந்தனாடி’ போன்ற படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன.
தனுஷுடன் இணைந்து ‘புதுப்பேட்டை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் பணிகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலிருந்த படியே தனது பணிகளை செய்துவரும் செல்வராகவன், நான்கு புதிய ஸ்கிரிப்ட்களை எழுதி முடித்து விட்டதாக சமீபத்தில் கூறியிருந்தார். வீடியோ கால் மூலமாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் செல்வராகவன் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய செல்வராகவன் தனது நீண்ட நாள் ஆசை குறித்து வெளிப்படுத்தியுள்ளார். அப்போது, ‘தான் நடிகர் கவுண்டமணியின் தீவிர ரசிகர் என்றும், ஒரு ரசிகனாக அவரது காமெடிகள் அனைத்தையும் பார்த்து விட்டேன் என்றும் அவரது நடை, அவர் தலையை திருப்புவது என அனைத்திலும் ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது’ எனவும் செல்வராகவன் கூறியுள்ளார்.
மேலும் ‘கவுண்டமணியை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனவும், ஒரு முறையாவது அவரை தான் சந்திக்க விரும்புவதாகவும்’ அந்தப் பேட்டியில் செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,