முன்னணி கதாநாயகர்கள் நடித்த படங்களை வெளியிடும் முனைப்பில் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் போட்டிபோட்டு அதற்கான புரமோஷன் வேலைகளை செய்து வருகின்றனர். இதனால், தமிழ் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகம், திரையரங்கு வட்டாரங்கள் மீண்டும் உயிர்ப்புடன் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த பரபரப்புக்கு மத்தியில் குறைந்த பட்ஜெட்டில் தயாராகியுள்ள கடைசி விவசாயி படத்தின் இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
அதில், பில்கேட்ஸிடம் தமிழ் பேசியதாக விஜய் சேதுபதி கூறும் உரையாடல் எல்லா தரப்பினராலும் விரும்பி ரசிக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. காக்காமுட்டை திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகி திரையுலகினரிடமும், நல்ல படைப்புகளை நேசிக்கும் சினிமா ரசிகர்களிடமும் கவனத்தை பெற்றவர் மணிகண்டன். காக்கா முட்டை திரைப்படம் வசூல் மற்றும் படைப்புரீதியாக வெற்றிபெற்று தேசிய விருதையும் வென்றது. அதன் பின்னர் குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கினார் மணிகண்டன். இந்த இரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றன.
இதையடுத்து இயக்குநர் மணிகண்டன், இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் கடைசி விவசாயி. இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை இயக்குநர் மணிகண்டனே தயாரித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து வணிகரீதியாக வியாபாரம் எதுவும் நடக்கவில்லை, இருந்தபோதிலும் படம் சொல்லவரும் கருத்து, விஜய்சேதுபதி, யோகிபாபு இருவரும் இந்த படத்தில் நடித்திருப்பது, படத்திற்கான முக்கியத்துவத்தை உணர்த்தியது. கடைசி விவசாயி படத்தை திரையரங்குகளில் மட்டுமே முதலில் வெளியிட வேண்டும் என்பதில் தயாரிப்பாளரும் இயக்குநருமான மணிகண்டன் உறுதியாக இருந்தார். தற்போது கடைசி விவசாயி திரைப்படம் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயி படும் கஷ்டத்தை, விவசாயத்தை அழிக்க நடத்தப்படும் சூழ்ச்சிகளையும் தோலுரித்துக் காட்டும் விதமாக இப்படத்தின் திரைக்கதை இருக்கும் என ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் பில்கேட்ஸிடம் தமிழ் பேசியதாக விஜய் சேதுபதி கூறும் கடைசி விவசாயி இரண்டாவது ப்ரோமோ வணிக சினிமா புரமோஷன்களுக்கு மத்தியில் தனித்து கவனம் பெற்று வருவது நல்ல சினிமாவுக்கான தேடல் இங்கு உயிர்ப்புடன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
**அம்பலவாணன்**