இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று (பிப்ரவரி 9) பகல் 1:30 மணிக்கு நடக்கிறது.
போல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று (பிப்ரவரி 9) பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அதை உத்வேகத்துடன் ஆடி இந்தியா தொடரை வெல்லுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது.
பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் நல்ல நிலையில் உள்ளனர். இஷான் கிஷனும், தீபக் ஹூடாவும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ஆட்டம் ஏமாற்றத்தை அளித்தது. அவர் அதில் இருந்து மீண்டு சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
கடந்த போட்டியில் சுழற்பந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். யசுவேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளும், அணிக்கு மீண்டும் திரும்பிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி முத்திரை பதித்தனர். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான சவாலாக திகழ்ந்தனர். இன்றைய போட்டியிலும் அவர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்தில் முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் , பிரஷித் கிருஷ்ணா தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி வெஸ்ட் இண்டீசுக்கு உள்ளது. இதில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்து விடும்.
முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஆட்டத் திறன் மோசமாக இருந்தது. ஹோல்டர், பேபியன் ஆலன் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே சரியாக ஆடவில்லை. மேலும் பந்துவீச்சும் எடுபடவில்லை. அதை சரி செய்யும் விதமாக நாளைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி திறமையை வெளிப்படுத்துமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகள் இன்று மோதுவது 135ஆவது போட்டியாகும். இதுவரை நடந்த 134 ஆட்டத்தில் இந்தியா 65இல், வெஸ்ட் இண்டீஸ் 63இல் வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டி முடிவு இல்லை. 2 ஆட்டம் டை ஆனது.
**-ராஜ்**
.