சசிகுமார் நடிக்கும் புதிய படமான ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஜெய், நஸ்ரியா நடித்த ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ இயக்குநர் அனிஸ் இயக்கத்தில்தான் இந்தப் படம் உருவாக இருக்கிறது. படத்தில் சசிகுமாருடன் வாணி போஜன், பிந்து மாதவி இணைந்து நடிக்கிறார்கள்.
சசிகுமார் நடிப்பில் எம்.ஜி.ஆர். மகன் படம், கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால், படம் இன்னும் சில காலம் தள்ளிப்போகிறது. அடுத்த ரிலீஸ் தேதி எதுவென்றும் இன்னும் முடிவாகவில்லை. அதோடு, கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், பரமகுரு மற்றும் பகைவனுக்கு அருள்வாய் என பல படங்களை கையில் வைத்திருக்கிறார் சசிகுமார்.
அதுபோல, விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 மற்றும் சக்ரா படங்கள் படமாக்கப்பட்டு வருகிறது. அதோடு, நிறைய தயாரிப்பாளர்களிடம் நடிப்பதற்காக அட்வான்ஸ் வாங்கி வைத்திருக்கிறார் விஷால். ஆனால், படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு, அரசியலில் குதிப்பதற்காக ஆலோசனை நடத்தி வருகிறார். எந்தப் படமும் இன்னும் கமிட் ஆகவில்லை . அதனால், தயாரிப்பாளர்கள் எப்போது படத்தை எடுப்பது என தெரியாமல் காத்திருக்கிறார்கள்.
ஒருபக்கம் சசிகுமார் கொத்துகொத்தாக படங்களை நடிக்கிறார், இன்னொருபக்கம் அடுக்கடுக்காக அட்வான்ஸை மட்டும் வாங்கிவிட்டு டிமிக்கி கொடுக்கிறார் விஷால். இப்படி இருப்பதால், பைனான்சியர்கள் சங்கம் ஒரு முடிவு ஒன்றை எடுத்துள்ளது. விஷால், சசிகுமார் இருவருக்கும் புதிய படங்களை தயாரிப்பதைத் தவிர்க்குமாறு சைலண்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
புதுப்படங்களைத் தயாரிக்க இருந்தால், உடனடியாக சங்கத்தை அணுகிவிட்டு தொடங்கவும் என்று வலியுறுத்தியும் இருக்கிறது. அதோடு, இருவருக்கும் கிடப்பில் இருக்கும் படங்கள் வெளியான பிறகு புதுப் படங்களை கொடுங்கள் எனவும் தயாரிப்பாளருக்கு கூறியும் இருக்கிறார்கள் பைனான்சியர்கள் சங்கத்தினர். இந்தத் தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
**-ஆதினி**�,