நடிகை சாரா அலி கான், பிரபல பாலிவுட் நடிகர் செயிஃப் அலி கானின் மகள். தனுஷ் நடிக்கும் இந்தி திரைப்படத்தின் கதாநாயகி.
ஆனால் தான் நடிக்கும் திரைப்படங்களைத் தாண்டி ஒரு புகைப்படம் மூலமாக இணைய சர்ச்சையில் சிக்கியுள்ளார். சாராவின் இளைய சகோதரர் இப்ராஹிம் அலி சமீபத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். தம்பியின் மீது அதிக பாசம் வைத்துள்ள சாரா இருவரும் இணைந்து நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறினார்.
அந்தப் புகைப்படம் தான் பல்வேறு விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆரம்பப்புள்ளி வைத்திருக்கிறது. காரணம், அழகுக் கடலின் அருகே நின்று எடுக்கப்பட்ட அந்தப் ஃபோட்டோவில் சாரா பிகினி அணிந்து தம்பியை அணைத்துக் கொண்டு நிற்கிறார்.
**சமூக வலைதளங்களில் பிகினி அணிந்த ஃபோட்டோவையா போடுவது**
**தம்பியின் முன்பு இப்படித் தான் உடை அணிவதா**
**கொஞ்சம் கூட வெக்கமே இல்லையா உனக்கு, சகோதரனுடன் இப்படியா போஸ் கொடுப்பது**
என்ற தனிப்பட்ட கேள்விகளில் தொடங்கி, **ஒரு முஸ்லீம் இந்த மாதிரி உடை அணியலாமா** என மத ஒழுக்கம் குறித்தும், **இந்தியாவில் பிறந்து இப்படி ஃபோட்டோ போடலாமா** என இந்திய கலாச்சாரத்தின் மதிப்பு குறித்துமான கேள்விகளும், அறிவுரைகளும் சாராவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் நிறைந்தது .
20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களால் கமென்ட் செய்யப்பட்ட அந்தப் புகைப்படத்தை இருபது இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனிமனித ஒழுக்கம், மதம், கலாச்சாரம் என்பதையெல்லாம் கடந்து ஒரு புள்ளியில் சாரா ஒரு ‘பெண்’ என்பதற்காக மட்டும் சில கேள்விகளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. ‘பிரபலமாக இருந்தாலும் பெண்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு வேண்டும்’ என்ற பொருளுடைய பல விளக்கங்கள் அங்கு தரப்பட்டிருந்தது. ‘நீங்கள் சாராவை மட்டும் விமர்சனம் செய்கிறீர்கள். அருகில் நிற்கும் அவரது தம்பி கூட உள்ளாடை தான் அணிந்திருக்கிறார். அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?’ என்று ஒரு பெண் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மற்றொருவர், ‘இப்ராஹிம் பாக்ஸருடன் பனியனும் அணிந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் சாரா உடலில் தன் கை படாத வகையில் கைகளை மடித்து வைத்துள்ளார்’ என்று பதிலளித்தார். இந்த விமர்சனங்களைப் படித்த மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த ஒருவர், ‘இந்திய மக்கள் உயர்வான சிந்தனைகளைக் கொண்டவர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த கமென்டுகளைப் பார்த்ததன் பின்னர் என் எண்ணத்தை மாற்றி விட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு அக்காவாக, முஸ்லீமாக, இந்தியராக, பெண்ணாக சாரா எதிர்கொண்ட கேள்விகளும் அதற்கு விமர்சனம் செய்தவர்களின் மனநிலையும் பல விஷயங்களை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. “தான் என்ன உடை அணிய வேண்டும்? எப்படிப் புகைப்படம் எடுக்க வேண்டும்? அதை யாருடன் எடுக்க வேண்டும்? எங்கு பதிவேற்ற வேண்டும்?” என்ற முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் அவருக்கு இருக்கிறது. தனது சகோதரன் அருகில் அத்தகைய உடையணிந்து சாரா நிற்கிறார் என்றால், அவர் தன் தம்பியை தம்பியாக மட்டும் தான் பார்க்கிறாரே தவிர ஒரு ஆணாக அவர் பார்க்கவில்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. மழலைப் பருவம் முழுவதும் ஒன்றாகத் தூங்கி, ஒன்றாகக் குளித்து, ஒன்றாகவே விளையாடிய பல அக்கா-தம்பிகளும், அண்ணன்-தங்கைகளும் சமூகம் கற்றுத் தந்த பாடங்களால் ‘ஆண்-பெண்’ என்று மட்டும் மாறும் போது அன்னியமாக்கப் பட்டுள்ளார்கள்.
அப்பாவாக இருந்தாலும் அருகில் அமராதே, அண்ணனாக இருந்தாலும் கட்டி அணைக்காதே, தம்பியாக இருந்தாலும் தள்ளியே இரு என்ற பாடங்கள் பெண்களுக்குக் கற்பிக்கப்படும் போது, பெண்களின் ஒழுக்கம் குறித்த எண்ணங்கள் மட்டுமல்லாமல் ஆண்கள் ஒழுங்கீனமானவர்கள் என்ற எண்ணமும் அவர்களுக்குள் புகுத்தப்படுகிறது. ஆனால் பெற்றோர் இல்லாமல் படுக்கையில் இருக்கும் தங்கையின் உடைகளை மாற்றி, கழிவுகளைக் கைகளால் நீக்கி, அவளை பத்திரமாகப் பார்க்கும் ஆண்கள் சிலரும் நமது சமூகத்தில் வசிக்கிறார்கள் என்பதைப் பலரும் மறந்து விடுகிறார்கள். பால் மணம் மாறாத குழந்தையிடமும், காமச் சுவை தேடும் மனிதர்கள் இருக்கும் சமூகத்தில் தான் பெண்களுக்கு அவர்களின் உடை ஒழுக்கம் குறித்த பாடங்கள் தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களும், இணைய பயன்பாடும் அதிகரித்ததன் பின்னர் மனிதர்கள் நடந்துகொள்ளும் விதத்திலும் சில ஆபத்துகள் இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் என்பதாக சமீபத்தில் ‘என் கணவர் என்னை விட்டுப் போய்விட்டார். ஆனால் எங்கே இருந்தாலும் அவர் நன்றாக இருக்கட்டும்’ என்று கூறி அழுத சகோதரியின் வீடியோ பலரையும் அழ வைத்து, பல்லாயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டது. ஆனால் அவர் ஒழுக்கமற்றவர் என்பதை எப்படியேனும் நிரூபிக்க வேண்டும் என மும்முரமாக செயல்படத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் வாயில் ரத்தம் சொட்ட, ‘நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்’ என்று அவர் வீடியோ வெளியிட்டார். முன்னால் ஆதரவுக்கரம் நீட்டியவர்களும், ஆறுதல் கூறியவர்களும் தற்கொலை செய்வது குறித்த வீடியோவிற்கு மட்டும் காணாமல் போய்விட்டனர். மீண்டும் ‘நான் நலமாக இருக்கிறேன்’ என்று கூறி அவர் வீடியோ வெளியிட்டதும், முன்னர் காணாமல் போனவர்கள் ‘சிங்கப் பெண்ணே’ என்று கூறி மீண்டும் அவரைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.
சாரா அலி கானின் பிகினி புகைப்படம் பற்றிய செய்தியில் இதை எல்லாம் பேச வேண்டிய அவசியம் இருக்கிறதா? என்று கேட்டால் இருக்கிறது. முக்கியமாக இன்றைய தினமாவது பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. மகளிர் தினக் கொண்டாட்டங்களில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் நாம், இவற்றைக் குறித்தும் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. பெண்களுக்கு ஒழுக்கங்களையும், நன்னடத்தை நெறிகளையும் கற்றுத் தர வேண்டியது அவசியம் தான். ஆனால் ஆண்கள் மனதளவில் பலவீனமானவர்கள், அவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்பது போன்ற தவறான பாடங்களை அவர்கள் மனதில் மறைமுகமாகக் கூடப் புதைத்துவிடக் கூடாது என்பதும் முக்கியமானது.
அனைத்து மகளிருக்கும், மகளிரைப் போற்றும் அத்தனை மகன்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”