ரீமேக் படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

Published On:

| By Balaji

தமிழில் புதுமையான பல இசைகளைக் கொடுத்தவர் சந்தோஷ் நாராயணன். இவர் இசையமைத்த எல்லா படங்களிலுமே பாடல்கள் நன்றாக வந்திருக்கும். குறிப்பாக, சந்தோஷ் – பா.ரஞ்சித் மற்றும் சந்தோஷ் – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவான எல்லா பாடல்களுமே ஹிட் ரகம். இந்நிலையில், ரீமேக் படத்துக்கு இசையமைக்க இருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா , தபு நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அந்தாதூன். இந்தப் படத்தில் பார்வை சவால் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆயுஷ்மான். நெகட்டிவ் ரோலில் தபு நடித்திருப்பார். பெரிய வசூல் பெற்ற இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றினார் தியாகராஜன்.

தியாகராஜனிடம் உரிமை இருந்தால், ஹீரோ வேறு யாராக இருக்க முடியும்? இந்தியில் ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கிறார். படத்தில் தபு கேரக்டரில் சிம்ரன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தபுவுக்கு இந்தியில் 40+ கேரக்டர் ரோல். அதே ரோலில் தான் சிம்ரன் நடிக்கிறார். ஆயுஷ்மானுக்கு 25+ வயது கொண்ட ரோல். அந்த ரோலில் பிரசாந்த் நடிக்கிறார். பிரசாந்துக்கு ஜோடியாக சிம்ரன் கண்ணெதிரே தோன்றினால் , ஜோடி உள்ளிட்ட ஐந்து படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கான முதல்கட்ட பணிகள் தற்பொழுது போய்க் கொண்டிருக்கிறது. படத்தை ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஃபெட்ரிக் இயக்குகிறார். ஆரம்பத்தில் மோகன் ராஜா இயக்க பேச்சுவார்த்தை நடந்தது கூடுதல் தகவல்.

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார். பொதுவாக ஒரிஜினல் கதைகளுக்கு இசையமைக்கும், இசையமைப்பாளர்கள் ரீமேக் படத்துக்கு பெரிதாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில், இந்தியில் ஹிட்டாகிவிட்டதால், வேறு மொழிக்கு போகும் போது எதிர்பார்ப்பு பெரிதாக இருக்கும். கொஞ்சம் மிஸ் ஆனாலும் சொதப்பலாகிவிடும். அதையும் மீறி, புதிய பரிசோதனையாக இந்தப் படத்துக்கு இசையமைக்க இருக்கிறாராம் சந்தோஷ் நாராயணன்.

**-ஆதினி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share