ரொமான்டிக் ஃபேன்டஸி படத்தில் சமந்தா

Published On:

| By Balaji

தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி வரும் தயாரிப்பு நிறுவனமனா டீரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகை சமந்தா நடிக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோக்கர், அருவி என சமூகம், அரசியல் சார்ந்த படைப்புகள் ஒருபுறம், காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே என மசாலா கொண்டாட்டம் தரும் படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் நிறுவனம் டீரீம் வாரியர் பிக்சர்ஸ்.

இப்போது இந்த நிறுவனம் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்றாக ரொமான்டிக் ஃபேன்டஸி வகையில் உருவாகவுள்ள இந்தப் புதிய படத்தை அறிமுக இயக்குநரான சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார்.

இவர் ஒருநாள் கூத்து படத்தில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசனிடமும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியிடமும் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

தமிழில் ஒரு புது முயற்சியாக, ஃபேன்டஸி ரொமான்டிக் படமாக, பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் இந்தப் படம் உருவாகிறது.

டீரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் நடிகை சமந்தா நடிப்பது இதுவே முதன்முறை. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

**அம்பலவாணன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share