நடிகை சமந்தாவின் 35வது பிறந்தநாள் இன்று. ‘மாஸ்கோவின் காவேரி’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் தற்போது தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
இந்த செய்தி தொகுப்பில் சமந்தா குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
* சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சமந்தாவுக்கு முதலில் சினிமாவில் நடிக்கும் எண்ணமே இல்லை. அவர் ஆங்கிலோ இந்தியன் கம்யூனிட்டியில் வளர்ந்ததால் அங்கிருப்பவர்களை போலவே ஆஸ்திரேலியாவில் படித்து செட்டில் ஆக விரும்பினார். ஆனால், கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது தோழி ஒருவரின் பர்த்டே பார்ட்டிக்கு சென்றவருக்கு அங்கு மாடலிங் வாய்ப்பு கிடைத்தது. பாக்கெட் மணிக்காக தொடர்ந்து மாடலிங்கை செய்தவருக்கு ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தான் இயக்கிய ‘மாஸ்கோவின் காவேரி’ படம் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார்.
* ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘தெறி’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை தமிழ், தெலுங்கில் கொடுத்திருக்கிறார். இந்த வருடத்தோடு சினிமாவுக்குள் சமந்தா நுழைந்து 12 வருடங்கள் ஆகிறது.
*புதுப்புது விஷயங்களை கற்று கொள்வதிலும், புத்தகம் படிப்பதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். லாக் டவுன் சமயத்தில் சமையல், தோட்டக்கலை என பல விஷயங்களை ஆர்வமுடன் கற்று கொண்டதுடன் தனது சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்து கொள்வார்.
*இன்ஸ்டாகிராமில் மட்டும் சமந்தாவை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 23 மில்லியனுக்கும் மேல். ‘சினிமாவில் என்னை அந்த கதாப்பாத்திரமாக மட்டும் தான் பார்ப்பீர்கள். ஆனால், சமூக வலைதளங்கள் மூலமாக என்னை யார் என வெளிப்படுத்தி கொள்ள விரும்புகிறேன்’ என்பார்.
*எந்தவொரு விஷயத்தை செய்தாலும் அதை சிறப்பாக மட்டுமே செய்ய வேண்டும் எனவும் அந்த வேலையால் பிறர் பாதிக்கப்படக்கூடாது எனவும் கூறுவார்.
*கோலிவுட், பாலிவுட், ஓடிடி தளங்களில் கால் பதித்தவர் அடுத்து ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார்.
*நாக சைதன்யாவுடனான திருமண முறிவுக்கு பிறகு மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்தவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ‘நான் இதை கடந்து வருவேன் என எதிர்ப்பார்க்கவே இல்லை. நீங்களும் மன அழுத்தத்தில் இருந்தால் நண்பர்கள், கவுன்சிலர்களிடம் உதவி கேட்க தயங்காதீர்கள்’ என்பது தான் சமந்தா கொடுத்த அட்வைஸ்.
*விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் இன்று வெளியாகி அவரது கதிஜா கதாப்பாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவரது பிறந்தநாளிலேயே படம் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள், ரகுல் ப்ரீத் சிங், ஹன்சிகா என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
**ஆதிரா**