இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் சென்ற வருடம் எட்டு மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டது. பின்னர், கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரவும் திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, தமிழில் பல திரைப்படங்கள் வெளியாகின.
தமிழகத்தில் திரையரங்குகள் இயல்பு நிலைக்கு வர பெரிதும் எதிர்பார்த்த திரைப்படம் விஜய் நடித்த மாஸ்டர். இப்படம் வெளியாகி ரசிகர்களை கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு அழைத்து வந்தது. தமிழில் மாஸ்டர் போல, இந்தி திரையுலகம் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பெரிய பட்ஜெட் படம் சல்மான் கான் நடித்திருக்கும் ‘ராதே’ . இப்படம் வெளியாகி, பாலிவுட் திரையுலகை மீட்டு கொண்டுவரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், தற்பொழுது கொரோனா இரண்டாம் அலை பரவ துவங்கிவிட்டது. இதனால், ராதே ரிலீஸில் புதிய முடிவொன்றை எடுத்திருக்கிறார்கள்.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், மேகா ஆகாஷ், திஷா படானி, பரத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ராதே’. சல்மான் கான் தயாரித்திருக்கும் இப்படம் ‘வெடரன்’ எனும் செளத் கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். கடந்த வருடமே வெளியாகியிருக்க வேண்டிய இப்படம், வருகிற மே 13ஆம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்துக்கான டிவி, டிஜிட்டல், தியேட்டர், மியூசிக் ரைட்ஸ் என அனைத்தையும் ஜீ ஸ்டுடியோஸூக்கு 230 கோடிக்கு சல்மான் கான் விற்றுவிட்டதாக சமீபத்தில் சொல்லப்பட்டது. அதன்படி, படத்தின் டிரெய்லரும் இன்று வெளியாகியுள்ளது. இப்படம், நிச்சயம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என சல்மான்கான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படம் திரையரங்கில் வெளியாகும் அதே நேரம் டிஜிட்டல் தளத்திலும் வெளியாக இருக்கிறது. அதாவது, ராதே திரையரங்கில் வெளியாகும் அதே நாள், நேரடியாக ஜீ ப்ளெக்ஸ் ஓடிடியிலும் வெளியாக இருக்கிறது. திரையரங்கிற்கு வர தயக்கம் கொள்ளும் ரசிகர்கள் வீட்டிலிருந்தே கொண்டாடவே இந்த திட்டமாம். திரையரங்கில் வெளியாகி 30 நாட்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிட முன்னர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், திரையரங்க கட்டுப்பாடுகள் நிலவுவதால் ஒரே நேரத்தில் வெளியிட முடிவெடுத்துள்ளனர்.
ஆக, சல்மான்கானின் ’ராதே’ திரைப்படத்தை பார்க்க குறிப்பிட்ட தொகை செலுத்தி ஜீ ப்ளெக்ஸ் தளத்தில் பார்க்கலாம். அதோடு, ஜீ5, டாடா ஸ்கை, டிஷ் டிவி, ஏர்டெல் டிஜிட்டல் டிவி உள்ளிட்ட டிடிஹெச் மூலமாகவும் பணம் செலுத்திப் பார்க்கலாம் என அறிவித்துள்ளனர்.
விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான க/பெ ரணசிங்கம் படம் வெளியான மாதிரி, ராதே படமும் வெளியாக இருக்கிறது.
**- ஆதினி **
.�,