தமிழ் சினிமாவில் வித்தியாசமான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றிருந்த நடிகர் சலீம் கவுஸ் நேற்று ( 28.04.2022) மும்பையில் காலமானார். அவருக்கு வயது 70.
சென்னையை சேர்ந்த சலீம் கவுஸ்புனே திரைப்பட கல்லூரியில் நடிப்புப் பயிற்சியை பெற்றவர். தொடக்க காலங்களில் சென்னையில் நடந்து வந்த ஆங்கில நாடகங்களில் நடித்து வந்தார். பிரதாப் போத்தனின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘வெற்றி விழா’ படத்தில் ‘ஜிந்தா’ என்ற வில்லன் கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து சின்ன கவுண்டர்,திருடா திருடா படங்களில் அவர் நடித்த பாத்திரங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானாலும், விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் வேதநாயகம் என்ற கேரக்டரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்தார் சலீம்.
2010-ல் இந்தியில் வெளியான ‘வெல்டன் அப்பா’ படத்துக்குப் பிறகு, ஆண்ட்ரியா நடித்துள்ள ‘கா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை.
இயக்குநர் நாஞ்சில் இயக்கியுள்ள திரில்லர் படமான ‘கா – தி ஃபாரஸ்ட்’ படத்தில் ஆண்ட்ரியா வைல்ட் லைஃப் புகைப்படக் கலைஞராகவும், சலீம் கவுஸ் வன விலங்கு காப்பாளராகவும் நடித்துள்ளனர்.
தமிழ் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார் சலீம். இயக்குநர் பரதன் இயக்கிய மலையாளத் திரைப்படமான ‘தாழ்வாரம்’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள இவர், ஷாருக்கான் மற்றும் மாதுரி தீட்சித்தின் கொய்லா,சாரன்ஷ், முஜ்ரிம் போன்ற இந்திப்படங்களிலும் நடித்துள்ளார்.
**-இராமானுஜம்**