இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், முதன் முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய நாள் இன்று.
கடந்த 1989 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதிதான், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்த டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் அறிமுகமானார். அப்போது சச்சின் டெண்டுல்கருக்கு 16 வயது 205 நாட்கள். அதே போட்டியில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸும் அறிமுகமானார்.
இந்த போட்டியில் மிடில் ஆர்டரில் மனோஜ் பிரபாகருக்குப் பிறகு பேட்டிங் செய்ய களமிறங்கிய டெண்டுல்கர் 15 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் டெண்டுல்கரின் விக்கெட்டை எடுத்தது, அதே போட்டியில் அறிமுகமான வக்கார் யூனுஸ் என்பது குறிப்பிடத் தக்கது.
அன்று தொடங்கிய டெண்டுல்கரின் ஆட்டம் கிரிக்கெட் உலகில் ஒரு சகாப்தத்தைப் படைத்தது.லிட்டில் மாஸ்டர் என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட டெண்டுல்கர், பின்னர் மாஸ்டர் பிளாஸ்டர் ஆனார்.
200 டெஸ்ட் போட்டிகளில் 15, 921 ரன்கள், 463 ஒரு நாள் போட்டிகளில் 18,426 ரன்கள் எடுத்துள்ள சச்சின் டெண்டுல்கர், மொத்தம் 100 சதங்களை அடித்து சதத்திலும் சதம் அடித்தார்.
’பிளேயிங் இட் மை வே’என்ற தனது சுயசரிதையில், தனது முதல் கிரிக்கெட் மேட்ச் பற்றி டெண்டுல்கர் எழுதியிருக்கிறார். அதில் அவர், “பாகிஸ்தானுடனான முதல் கிரிக்கெட் மேட்ச் என்பது எனக்கு நெருப்பில் குளிப்பதைப் போல் இருந்தது. வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் ஆகியோரின் பந்துகளை எதிர்கொண்டபோது, ‘நானெல்லாம் இன்டர் நேஷனல் கிரிக்கெட்டுக்கு தாக்குப் பிடிப்பேனா என்று சந்தேகப்பட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருப்புக் குளியலுக்குப் பிறகுதான் ரன் மழை பொழிந்தார் சச்சின் டெண்டுல்கர். இன்றும் அவரது முதல் மேட்ச் காட்சியைப் பார்க்கும்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கும், எந்தத் துறையாக இருந்தாலும் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கும் உத்வேகமும் உற்சாகமும் பிறக்கும்.
**-வேந்தன்**
�,