மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற சில படங்கள் தமிழில் தற்பொழுது ரீமேக் ஆகிவருகிறது. அப்படி, மலையாளத்தில் பெரிய பாராட்டுகளைப் பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
மலையாளத்தில் சுராஜ், நிமிஷா சஜயன் நடிப்பில் நீ ஸ்ட்ரீம் எனும் ஓடிடியில் நேரடியாக வெளியான படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதன் வெற்றிக்குக் காரணம் படத்தின் கரு தான். பழைமை வாதக் கொள்கை கொண்ட வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் நாயகி சந்திக்கும் சிக்கல்களும், அதை உடைத்தெறியும் இடமுமாக படம் உருவாகியிருக்கும்.
இந்தப் படம் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆகிறது. இயக்குநர் கண்ணன் இந்தப் படத்தை தயாரித்து இயக்குகிறார். இந்தப் படத்தில் நிமிஷா ரோலில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. முதலாவதாக, ஐஸ்வர்யா ராஜேஷூக்கான காட்சிகளோடு படம் துவங்கியிருக்கிறது. பிரதானமாக மூன்று கேரக்டர்களே படத்தில் இருக்கும். அதோடு, ஒரே வீட்டுக்குள் ஒட்டுமொத்த படமும் நடைபெற இருக்கிறது.
காக்கா முட்டை, கனா மாதிரியான வித்தியாசமான ரோல்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பதால், இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. தெலுங்கில் நானி நடித்து வெளியான நின்னுக்கோரி படத்தின் தமிழ் ரீமேக்கான ‘தள்ளிப் போகாதே’. இந்தப் படத்தை அதர்வா நடிக்க இயக்கி முடித்திருக்கிறார் கண்ணன். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், மலையாள ரீமேக்கை கையில் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்திலிருந்து தமிழுக்கு ‘அய்யப்பனும் கோஷியும்’, ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படங்களும் ரீமேக் ஆகிவருவது குறிப்பிடத்தக்கது.
**- ஆதினி**
�,