uஅரசுக்கு எதிராக ஆர்ஆர்ஆர் படக்குழு வழக்கா?

Published On:

| By Balaji

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா மற்றும் பலர் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர். 400 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகியுள்ள இப்படம் 2022 ஆம் வருடம் ஜனவரி 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இப்படத்திற்கு ஆந்திரா மாநிலத்தில் புதிய சிக்கல் ஒன்று உருவாகி உள்ளது. ஆந்திர அரசு சில மாதங்களுக்கு முன்பு சிறிய நகரங்கள், கிராமங்களில் சினிமா டிக்கெட் கட்டணம் 20 ரூபாய், 30 ரூபாய் என நிர்ணயித்தது. அதனால் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் தியேட்டர்களில் வசூலை குவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஏற்கெனவே திரையுலக சங்கங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால், அரசு இன்னும் அதில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை.

இந்நிலையில் தெலுங்கில் ‘ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், புஷ்பா’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இவற்றில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் பட்ஜெட் தான் மிக அதிகம். எனவே, அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வசூலை அள்ளினாலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.

இது தொடர்பாக ஆந்திர அரசின் உத்தரவை எதிர்த்து ஆர்ஆர்ஆர் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடரப் போவதாக தகவல் வெளியானது. அதை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக விரைவில் அரசிடம் பேசப்போவதாகவும், எந்த சிக்கலும் இல்லாமல் பிரச்னையைத் தீர்க்க முயற்சிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது.

ராஜமவுலி இயக்கி இதற்கு முன்பு வெளிவந்த ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களுக்கும் 500 ரூபாய் வரையில் டிக்கெட் கட்டணம் இருந்ததால்தான், அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றியை பெறமுடிந்தது. ஆந்திர அரசின் டிக்கெட் கட்டண முடிவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் ‘ஆர்ஆர்ஆர்’ கட்டணம் எப்படி நிர்ணயிக்கப்படும் என்பதை இந்தியா முழுவதும் திரைப்பட துறையை சேர்ந்தவர்கள் எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share