yஐந்து வருட சாதனையை காப்பாற்றிக்கொண்ட ரோஹித்

Published On:

| By Balaji

2013 முதல் 2018ஆம் ஆண்டு வரை ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு வருடமும் அதிகபட்ச ரன்களை எடுத்த இந்திய வீரர் என்ற பெருமை ரோஹித் ஷர்மாவை சேரும். இந்த வருடம் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்வாரா என்ற சந்தேகம் அதிகமாக இருந்தது. காரணம் வெஸ்ட் இண்டீஸ் தொடர் ஆரம்பிக்கும் வரையில், ஒரு ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த இந்திய வீரராக 143 ரன்களுடன் ஷிகர் தவான் இருந்தார். 3 ஒரு நாள் போட்டிகளில் ஏதாவது ஒரு ஆட்டத்தில் 143 ரன்களுக்கு மேலாக எடுக்கவில்லை என்றால், ரோஹித்தின் ஐந்து வருட தொடர் சாதனையை இழக்க வேண்டிய சூழல் இருந்தது. முதல் ஒரு நாள் போட்டியில் 36 ரன்களுடன் ரோஹித் வெளியேறியது மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. அதேபோல இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும், அரை சதத்தைக் கடந்த நிலையில் 27ஆவது ஓவரின் போது ரோஹித் ஷர்மா அடித்த பந்து ஹெட்மயரை நோக்கிச் சென்றபோது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், ஹெட்மயர் அந்த கேட்சை தவறவிட்டதன் பிறகு, ரோஹித்தை யாராலும் நிறுத்தமுடியவில்லை. இந்திய அணிக்கு 159 ரன்கள் சேர்த்துக்கொடுத்து, தனது சாதனையையும் தக்கவைத்துக்கொண்டார் ரோஹித் ஷர்மா. மேலும், 2019 வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. எனவே வாழ்வா சாவா என்ற இப்போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினார்கள். முதல் போட்டியில் செய்த தவறுகளை இம்முறை செய்யாமல் மிகுந்த பொறுப்புடன் இந்திய அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினார்கள். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் 27வது ஓவரில் ரோஹித் ஷர்மாவின் கேட்சை தவறவிட்டார் ஹெட்மயர். ரோஹித் சர்மா தன்னுடைய 28வது மற்றும் கே.எல்.ராகுல் தன்னுடைய 3ஆவது சதத்தை பதிவு செய்தனர். கே.எல்.ராகுல்(102) அல்சாரி ஜோசப் பந்துவீச்சில் வெளியேற, அடுத்து களமிறங்கிய விராட் கோலி ரன்கள் எதுவும் எடுக்காமல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தார்.

இரட்டை சதம் எடுப்பார் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கபட்ட ரோஹித் ஷர்மா 43வது ஓவரில் 159 ரன்கள் எடுத்தபோது ஷெல்டன் காட்டரெல் வீசிய பந்தில் ஹோப்பிடம் கேட்சாகி வெளியேறினார். அடுத்து வந்த ரிஷப் பந்த்(39) அதிரடியாக விளையாடி பெவிலியன் திரும்பினார். ஷ்ரேயஸ் ஐயர்(53) 48ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா 387-5 என்ற கடினமான இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கொடுத்தது.

காட்டரெல் 2 விக்கெட்டுகளையும், பவுல்,ஜோசப் மற்றும் பொல்லார்டு தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். ஒரு ஓவருக்கு 8 ரன்கள் எடுத்து ஆட்டத்தை நகர்த்த வேண்டும் என்ற வியூகத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் எவன் லூயிஸ் மற்றும் சென்ற போட்டியில் சதம் விளாசிய சாய் ஹோப் களமிறங்கியுள்ளார்கள். 8 ஓவர் முடிவில் 45 ரன்கள் எடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.

இரண்டாம் ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினம், டாக்டர். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. நேற்று மறைந்த முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன், பேசில் பட்ச்சர் அவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel