நடிகராக கவனிக்க வைத்த ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநராகவும் ‘மூக்குத்தி அம்மன்’ படம் மூலமாக தன்னை நிரூபித்துவிட்டார்.
நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படத்தைத் தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜியின் நெக்ஸ்ட் ‘பதாய் ஹோ’ ரீமேக். 2018ல் இந்தியில் வெளியாகி ஹிட்டடித்த படம் பதாய் ஹோ. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை கையில் எடுத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. இந்தப் படத்தினை போனிகபூர் தயாரிக்கிறார். மூக்குத்தி அம்மன் படத்தைப் போலவே, இப்படத்தையும் நண்பர் என்.ஜே. சரவணனுடன் இணைந்து இயக்குகிறார்.
ஆயுஷ்மான் குர்ரானா கேரக்டரில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சூரரைப் போற்று அபர்ணா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜியின் தந்தை ரோலில் சத்யராஜூம், தாயாக ஊர்வசியும் நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. தற்பொழுது, சூர்யா 40 படத்தில் நடித்துவருகிறார் சத்யராஜ். இந்தப் படம் முடிவடைய உள்ள நிலையில், நேராக, ஆர்ஜே பாலாஜியின் படத்துக்கு வருகிறாராம்.
இந்தப் படத்தின் கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது. திருமண வயதில் வீட்டில் மகன் இருக்கும் போது, வீட்டில் அம்மா கர்ப்பமாகிவிடுகிறார். அதனால், வீட்டில் நடக்கும் சம்பவங்களே ஒன்லைன். இந்தப் படத்தில் அப்பா ரோலில் சத்யராஜூம், அம்மாவாக ஊர்வசியும் கச்சிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த வாரம் கோவையில் துவங்குகிறது.
இந்தப் படத்துக்கு ஆர்.ஜே. பாலாஜி தேர்ந்தெடுத்த டைட்டில் ‘வீட்டுல விசேசங்க’. 1994-ல் பாக்கியராஜ் இயக்கி, நடித்து வெளியான படத்தின் பெயர் என்பது நினைவிருக்கலாம். அதனால், படத்தின் டைட்டில் உரிமை கோரி பாக்கியராஜிடம் சந்தித்துப் பேசினார் ஆர்.ஜே.பாலாஜி. நீண்ட யோசனைக்குப் பிறகு, படத்தின் டைட்டிலுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார் பாக்கியராஜ்.
பதாய் ஹோ தமிழ் ரீமேக்கிற்கு ‘வீட்டுல விசேசங்க’ டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காமெடி கலாட்டாவாக உருவாகும் இந்தப் படத்துக்கு இப்போதே, எதிர்பார்ப்பு ஏகபோகமாக நிலவிவருகிறது.
**- ஆதினி**
�,