சினிமாவில் புதிதாக தயாராகும் படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வெளியிடுவது வாடிக்கை.
வெற்றிபெற்ற படங்கள் 50நாட்கள், 100 நாட்கள் ஓடிய திரையரங்குகளின் பட்டியலை தயாரிப்பாளர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு எத்தனை விருதுகள் கிடைத்தது என்கிற பட்டியலை இயக்குநர் பெருமையுடன் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்திய சினிமாவில் முதன்முறையாக பொதுவெளியில் தனக்குப் பாலியல் தொல்லை தந்தவர்கள் பட்டியல் என்று 14 பிரபலங்கள் பெயர்களை வெளியிட்டு கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மலையாள நடிகையான ரேவதி சம்பத்.
இது மலையாள திரையுலகத்தையும் கடந்து சமூக வலைதளங்களில், செய்தி ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக இடம் பிடித்துள்ளது. ரேவதி சம்பத் 2019-ல் பட்னாகர் என்ற மலையாளத் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அறிமுகமானார். இவர் வாஃப்ட் என்ற குறும் படத்தை இயக்கித்தான் முதலில் பலருக்கும் அறிமுகமானார்.
தற்போது, தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என 14 பேருடைய பட்டியலை தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் ரேவதி சம்பத்.
இவர்கள் என்னை பாலியல் ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்வு ரீதியாக, துன்புறுத்தியவர்கள். லிஸ்ட் இதோ… என்று குறிப்பிட்டுள்ளார்.
1) ராஜேஷ் தொச்சிவர் (இயக்குனர்)
2) சித்திக் (நடிகர்)
3) ஆஷிக் மஹி (புகைப்படக்காரர்)
4) சிஜூ (நடிகர்)
5) அபில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்)
6) அஜய் பிரபாகர் (டாக்டர்)
7) எம்.எஸ்.பாதுஷ் (துஷ்பிரயோகம் செய்தவர்)
8) சவுரப் கிருஷ்ணன் (இணையதளத்தில் கேலி செய்தவர் )
9) நந்து அசோகன் ( டி.ஒய்.எப்.ஐ யூனிட் கமிட்டி உறுப்பினர், நெடுங்கர்)
10) மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குனர்)
11) ஷானூப் கர்வத் மற்றும் சாக்கோஸ் கேக்குகள் (விளம்பர இயக்குனர்)
12) ராகேந்த் பை (காஸ்ட் மீ பெர்பெக்ட், காஸ்டிங் டைரக்டர்)
13) சாருன் லியோ (ஈஎஸ்ஏஎப் வங்கி ஏஜெண்ட், வலியத்துரா)
14) பினு (சப் இன்ஸ்பெக்டர், பூந்துரா போலீஸ் நிலையம், திருவனந்தபுரம்)
என்று ரேவதி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரேவதி சம்பத், இரண்டு வருடங்களுக்கு முன்பே மலையாள சினிமாவின் மூத்த நடிகரான சித்திக் மீதான பாலியல் குற்றச்சாட்டை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், 2016-ல் தனக்கு சித்திக்கால் நிகழ்ந்த பாலியல் தொல்லையை வெளிப்படுத்தியதோடு, என் வயதிலுள்ள உங்கள் மகளுக்கு இப்படியொரு பாலியல் தொல்லை நேரிட்டால் என்ன செய்வீர்கள்..?‘ என்று கேட்டிருந்தார்.
அப்போதும் இவருடைய குற்றச்சாட்டுகளுக்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் எதிர்ப்புகளும் எழுந்தன.இப்போது இந்தப் பட்டியலைப் பார்த்தும் ஆதரவும், எதிர்ப்புமாக அவரது பேஸ்புக் பக்கத்தில் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
**-இராமானுஜம்**
.�,