nமுதல்வரிடம் விவேக் மனைவி வைத்த கோரிக்கை!

Published On:

| By admin

நடிகர் விவேக் வசித்து வந்த வீடு இருக்கும் தெருவுக்கு அவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்தனர்.
தமிழ்ச் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகத் திகழ்ந்த நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதியன்று திடீரென்று காலமானார். அவருடைய இடத்தை நிரப்புவதற்கு இன்று வரையிலும் வேறு எந்த நடிகரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு வெற்றிடம் உருவாகியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியன்று நடிகர் விவேக்கின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த நாளில் விவேக்கின் நினைவையொட்டி மரக்கன்றுகள் தமிழகம் முழுவதும் நடப்பட்டன.
இந்த நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் விவேக் மனைவி அருட்செல்வி தனது மகளுடன் சந்தித்தார்.
அப்போது விவேக்கின் வீடு தற்போது இருக்கும் தெருவுக்கு விவேக்கின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை முதல்வரிடம் அளித்தார். நடிகர் விவேக்கின் வீடு சென்னையில் விருகம்பாக்கத்தில் பத்மாவதி நகர் மெயின் ரோட்டில் உள்ளது. இந்தப் பெயரைத்தான் விவேக் தெரு என்று பெயர் மாற்றம் செய்ய அவருடைய மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆவணச் செய்வதாக முதல்வர் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

**-இராமானுஜம்**